அத்தியாயம் 8

Joined
Aug 19, 2025
Messages
13
அத்தியாயம் 8:

காலை நடந்த சண்டையில் ரிதி அன்று முழுக்க வெளியே வரவே இல்லை.. நாள் முழுவதும் தன் தாயின் படத்தின் முன்பு அமர்ந்து தன் மனம் முழுக்க பாரத்தோடு அழ துவங்கியவள் இரவு வரையிலுமே உண்ணாமல் உறங்காமல் அழுது கொண்டிருந்தாள்..

வீரய்யாவும், ஆல்னாவும் எத்தனை சமாதானம் கூறியும் அவள் மனம் தேறிய பாடில்லை... இருவரும் கூட அவளோடு அமர்ந்து அவளை தங்கள் மடியில் தாங்கி ஆறுதல் படுத்திக் கொண்டிருக்க,

அவளின் நிலைத்த விழிகள் தன் தாயின் புகைப்படத்தை கண்டு வெறுமை சூழ்ந்த பார்வையோடு கண்ணீரை சுரந்து கொண்டே தான் இருந்தது...

"ஷிபியை பிடிக்கவில்லை என கூறவும் வழி இல்லை.. அவனை திருமணம் செய்தால் அவனின் சைக்கோ நடவடிக்கைகளில் விரைவில் தன் உயிர் போய்விடும். என்பதும் உறுதி.. தனக்காக அவன் வேண்டாம் என கூறினால் தன் தங்கையின் மானமும் உயிரும் அவன் கையால் போய்விடும் என பல முறை அவன் எச்சரித்தது, தன்னை அடிமைப்படுத்தப்பட்ட அந்த ஷிபிஆல்னாவை ஒருமுறை தனியே சந்தித்ததும் அன்று முழுவதும் அவள் உடல் நடுங்கி அழுது கொண்டிருந்ததும் கண் முன்னே வந்து போக,

வேறு வழியே இல்லை எனும் முடிவில் தன் உயிரையும் பணயம் வைத்து ஷிபியை மணந்து கொள்ள முடிவு செய்து தான் அத்தனை நேரம் அழுது கொண்டிருந்தாள் ரிதி...


இரவு வரை அவளை காணாமல் அவளை தேடி வீட்டிற்கே வந்த அவளின் குட்டி குட்டி நண்பர்களும் வயதானவர்களும் கூட வந்து அவளை காண வாசலில் நிற்க,

அவர்களின் சத்தம் கேட்டு கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தவள் விருட்டென உள்ளே சென்று முகத்தை அழுத்தமாய் தேய்த்து கழுவி முடித்து வரவழைக்கப்பட்டாள் அழகான சிரிப்போடு வெளியே வந்தாள்...

அனைவரும் அவளை சூழ்ந்து கொள்ள,
தனக்காய் நிற்கும் அவர்களை கண்டவள் மனம் சற்றே இலகுவாகி இருக்க, சிரித்த முகத்தோடு அனைவரையும் கண்டவள் வெளியே சென்று அவர்களோடு பேச துவங்கினாள்..

அங்கு அனைவரையும் கிருஷ்ணர் சிலை முன் அமர வைத்தவள் வழக்கம் போல பாட்டு பாடி அவர்களை மகிழ்வித்து கையில் இருந்த கற்கண்டினை மட்டும் கொடுக்க கொண்டிருந்தாள்...

வீரய்யா அவளை பார்த்து தன் வேதனையை மறைத்து பிறருக்காக துடிக்கும் அவளின் மனதை எண்ணி உள்ளூர சொல்லொண்ணா துக்கம் நெஞ்சை அடைக்க நெஞ்சில் கை வைத்து அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்..

ஆல்னா வெளியே வராமல் ஜன்னல் வழியே அவளை பார்க்க, அதே போல அவள் குரலின் சத்தம் கேட்டு ஈஸ்வரும் தன் பால்கனி அறையில் நின்று ரிதியை தான் பார்த்துக் கொண்டிருந்தான்..

அவன் கோப விழிகளில் அவள் இதழின் சிரிப்பும் கண்களின் அமைதி மட்டுமே தெரிய, அவளின் கவலை சூழ்ந்த முகம் பெரிதாய் தெரியாமல் போக, மனதில் ஏதோ உந்துதல் கதவை அங்கிருந்து பட்டென பால்கனி சாற்றி விட்டு உள்ளே சென்றான்..

இரவின் அமைதியில் அவன் சாத்தி விட்டு செல்லும் கதவின் சத்தம் நன்றாய் கேட்க, சட்டென நிமிர்ந்து பார்த்தவள் அவன் கோபத்தை கண்டு தன்னை காத்த அவனை நிந்தித்த வலி நிறைந்த மனதோடு திரும்பி சென்றாள்..

ஆம் அவள் மனமும் தனக்கு பாதுகாப்பாய் நின்ற ஈஸ்வரை காயப்படுத்தியதை எண்ணி வருந்திக் கொண்டு தான் இருக்கிறது.. எனில் எப்படி கூற முடியும்?? ஒருநாள் தன்னை காப்பாற்றியவனால் காலம் முழுக்க காப்பாற்ற முடியுமா என்ன??

இதோ இன்றோ நாளையோ அவன் சென்று விடுவான்.. அவனை நம்பி சென்று விட்டால் பின் ஷிபியால் ஏற்பட போகும் தன் குடும்பத்தின் நிலை என்ன?? " என்று சிந்தித்த ரிதி அவனுக்கு மானசீகமாக தன்னை காத்ததற்கு நன்றி கூறி விட்டு அவனை அவமதித்ததற்கு மன்னிப்பும் கேட்டு விட்டு அவ்விடத்தையே சில நிமிடங்கள் பார்த்தவள் பின் அனைவரையும் அனுப்பி விட்டு உள்ளே நுழைந்தாள்..

நாள் முழுக்க சிந்தித்தவள் இறுதியில் தனக்காக வாழும் இரு ஜீவன்களின் உயிரை விட, தன் உயிரும் வலியும் ஒன்றும் பெரிதில்லை என துணிவாய் அவனை ஏற்க முடிவு செய்தவள் அதிகாலை மாவலி கொண்டு வந்து கொடுத்து விட்டு சென்ற வெள்ளை நிற காட்டன் புடவையில் மயில் போட்ட எம்பிராய்டரி புடவையில், தங்க ஜரிகை வைத்த புடவை கட்டிக் கொண்டு அதற்கு ஏதுவான மயில் நிற ஜாக்கெட் அணிந்தவள், அவர்கள் கொடுத்த கனமான தங்க நகைகள் சிலவற்றையும் அணிந்து கொண்டு அதிகாலை நேரமே வெளியே வந்தாள்...

ஆல்னா வெளியே வராமல் அழுது கொண்டே கதவின் பின்னால் மறைந்து நிற்க, வீரய்யாவும் தளர்ந்த நடையோடு கலங்கிய விழிகளோடு தன் கண் முன்னே தன் பேத்தியின் வாழ்வு சீரழிய போவதை கண்டு நொறுங்கி நின்றார்..

ஆல்னாவை ஒரு முறை கட்டி அணைத்தவள், "விஷமிக்காத டி பொன்னுட்டி.. சம்பவிக்குன்னு சம்பவிக்கட்டே.. எந்து சம்பவித்தாலும் அப்போலும் ஞான் நிங்களோடு அரிக்கிலுண்டாக்கும்.. ( பயப்படாத டி தங்க குழந்தை.. என்ன நடக்குதோ நடக்கட்டும். என்ன நடந்தாலும் நான் உங்களோட பக்கத்தில் தான் இருப்பேன்..)" என கூறி தன் தங்கையின் கன்னத்தை கையில் ஏந்தி நெற்றியில் முத்தமிட்டவள் தன் வலியை மறைத்துக் கொண்டு வெளியே நடந்தாள்..

வாசலில் அவளுக்கான கார் தயாராக இருக்க, அந்நேரம் நீல நிற கரை வைத்த வெள்ளை வேட்டி, சந்தன நிற சட்டையை அணிந்து தன் கேசத்தை அழுந்த கோதிக் கோபத்தில் நடந்து கொண்டிருந்த ஈஸ்வர், தூரத்தில் பேரழகு சிலையாய் நடந்து வரும் ரிதியை கண்டு உறைந்து போனான்...

ஷிபி வீட்டில் இருந்து வந்த பெண்கள் சிலர் அவளோடு பேசிக்கொண்டே வர,

அவனோ அவர்களோடு அளவாய் பேசி லேசாக இதழ் வளைத்து சிரித்துக் கொண்டு நடந்து கொண்டு ரிதியை கண்டு அவள் முகத்தில் தெரியும் உணர்வுகளை படிக்க முயன்று தோற்று போனான்..

ரிதி காருக்கு அருகே செல்ல, அதே நேரம் ஈஸ்வரின் காரை சரி செய்து சென்ற கனியனும் அங்கு வந்து சேர, காரை நெருங்கி வந்த ஈஸ்வர் மிக அருகில் ரிதியை கண்டான்..

ஓரிரு நொடிகள் ஈஸ்வரை தொட்டு மீண்ட ரிதியின் பார்வையை எதிர் நோக்கிய ஈஸ்வர், அவள் விழிகள் மொழிந்த நன்றி கலந்த ஓர் உணர்வை அறிந்திடுங்கள் கூட சிரமப் பட்டு போனான்..

ஆம். இந்நேரம் டைரக்டர் ஈஸ்வராக இருந்திருந்தால் அவள் விழியில் உலவும் அத்தனை உணர்வுகளையும் சரியாய் கணித்திருப்பான்... இப்போதிருப்பது அவள் மேல் கண் மண் தெரியாத அளவு கோபத்தில் இருக்கும் ஈஸ்வர் ஆயிற்றே..

ஏன்?? எதற்கு அவள் மேல் இத்தனை கோபம்?? அவள் பிரியும் நொடி மனம் ஏன் இவ்வளவு தவிக்கிறது?? என பலவாறான சிந்தனைகளில் சிக்கியவன், "அவ என்னோட ப்ராஜெக்ட்.. அவ்வளவு தான்.. அவ எனக்கு வேணும்... அவ இல்லனா இன்னொருத்தரை தேட முயற்சி. பண்ணனும்.. அவ்வளவு தான் " என நேற்று வரை தனக்கு தானே சில ஆறுதல்கள் கூறி தேற்றி கொண்டிருந்தான்...

இன்றோ அவளின் பார்வையில் சிக்கியவனுக்கு மனம் தாறுமாறாக துடிக்க, தன் நெஞ்சை நீவி அவள் பார்வையை நிராகரித்து விட்டு தன் காரில் ஏறியவன், காரை புயல் வேகத்தில் செலுத்தி இருந்தான்...

இங்கோ ஈஸ்வரின் கோபப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தவித்தவள் நெஞ்சம் முழுக்க கூடுதல் வலியோடு காரில் ஏறி அமர்ந்தாள்..

மாவலி முகமோ சட்டியில் பொறிந்து கொண்டிருக்கும் மிளகாய் போல காட்டமும் கோபமும் கொண்டு இறுக்கமாய் இருக்க,

சுற்றி இருந்த பெண்களோ ஷிபியின் குணத்தை பற்றி பேசி சிரித்து கொண்டே வந்தனர்..

அதை எதையும் ரசிக்கும் மனமில்லாமல் வெறுமை சூழ்ந்த முகத்தோடு ஜன்னல் வழியே அசைந்தாடும் செடி கொடிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள் ரிதி...

ஒருமணி நேரத்திற்கு மேலாய் நேரம் கடக்க, ரிதி வந்து கொண்டிருந்த கார் குருவாயூர் கிருஷ்ணர் கோவில் குளத்தின் பின்னே நின்றது...

காரில் இருந்து இறங்கியவள் மெதுவாய் நடந்து கொண்டே மனதோடு அவளின் இஷ்ட தெய்வமான கிருஷ்ணரை திட்டிக் கொண்டு உள்ளே நுழைந்தாள்...

வாசலிலேயே நின்றிருந்து ஷிபி
அதிவேகமாய் ஓடி சென்று அவள் கைகளை பற்றிக் கொண்டு, " சுந்தரி. நீ இந்த பூவின்ன போல சுந்தரியானு டி நின்னு..(அழகி.. இந்த பூலாக அழகி டி நீ..)" என கூறி அவள் அழகில் மயங்கியவனோ மெதுவாய் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு கோவிலின் கருவறைக்கு அழைத்து சென்றான்....

அவன் கை பிடிக்குள் இருக்கும் தன் கைகளை வலியோடு பார்த்த ரிதி கசந்த புன்னகையோடு அவன் பின்னே அழகான அடிமை பதுமை போல அடி மேல் அடி வைத்து அங்குள்ள கிருஷ்ணர் புகைப்படங்களை வெறித்துப் பார்த்துக்கொண்டே நடந்தாள்...

இங்கு தன் காரில் பயணித்த ஈஸ்வர் இலக்கின்றி வேகத்தில் காரை ஓட்டியவன் நேற்று ரிதி அழைத்து வந்த சிவன் கோவிலுக்குள் சென்றான்..

அவ்வூர் வழக்கப்படி நேற்று ரிதி கூறிய சட்டையின்றி மட்டுமே ஆலயத்தில் நுழையும் வழக்கம் நினைவு வர, சட்டத்தை கழட்டிக் கொண்டே அவளை நினைத்தவன் கோபம் தாங்கிய விழிகளோடு தன் சிவனை நோக்கி சென்றான்...

வில்வ மாலையும், விபூதி வாசனையும் கோவிலின் இயற்கை அழகு, அவ்வளவு ஏன் நேற்று ரசித்த அந்த அல்லி பூ சூழ்ந்த குளம் கூட அவனை ஈர்க்கவில்லை போலும், அத்தனை வேகமாய் அவனின் சிவனை நெருங்கி இருந்தான் ஈஸ்வர்...

இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி சிவனை கண்ட ஈஸ்வர் கண்களை அழுந்த மூடி, நீண்ட பெரு மூச்சு விட்டு,
"ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய.... ஓம் நமசிவாய.." என ஐந்து முறை அழுத்தமாய் வாய் விட்டு உச்சரித்து அமைதியானவன் தன் சிவனுக்கு மட்டும் கேட்கும்படி சில விஷயங்களை கூறி லிங்க வடிவில் வீற்றிருக்கும் சிவனையே அழுத்தமாய் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்...

சில நிமிடங்கள் வரை அமைதியாய் மனதோடு தன் விருப்பமான தெய்வத்திடம் பேசியவன் வேகமாய் நடந்து தன் காரில் ஏறி, தன் அலைபேசியை எடுத்தவன் சில அழைப்புகளை பேசிக் கொண்டே காரை செலுத்திக் கொண்டிருந்தான்....

அவன் பின்னால் வேறொரு காரில் சஜின், கனி இருவரும் பயணித்துக் கொண்டிருந்தனர்...

இங்கோ ஷிபியின் சுற்றங்கள் மற்றும் சில நட்புகள் சூழ பொழுது புலர சில நிமிடங்கள் இருக்கும் நேரம் ரிதியின் கலங்கிய விழிகளையும் கவலை தோய்ந்த முகத்தையும் கண்டு கொள்ளாமல் அவள் பளிங்கு நிற வெண் சங்கு கழுத்தை நோக்கி திருமாங்கல்யத்தை எடுத்து சிரித்த முகத்தோடு அவளை நெருங்கினான் ஷிபி..

அந்நேரம் சரியாய் ஒரு புல்லட் ஒன்று அவன் கையில் இருந்த தாலியில் பட, தங்கம் கோர்க்கப்பட்ட அந்த கிருஷ்ணர் படம் இட்ட தாலி சங்கிலி அறுந்து கீழே விழுந்தது...

கண்களை மூடி தன் கிருஷ்ணரை மனதில் எண்ணிக் கொண்டே கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்த ரிதி நடப்பது தெரியாமல் நிற்க,

கோபத்தில் கண்கள் சிவக்க ஷிபி திரும்பிய நேரம் அங்கு அவனே எதிர்பாராத விதமாய் பிரபல மலையாள திரைப்பட நாயகன் சுர்ஜித் (கற்பனை பெயர்) கையில் துப்பாக்கியோடு நின்றிருந்தான்...

அவனுக்கு பின்னே சற்று தொலைவில் கைகளை மார்பின் குறுக்கே கட்டி கொண்டு நின்றிருந்த ஒரு ஜீவனின் கண்களோ அங்கு கண்களை மூடி நின்றிருந்த ரிதியை கண்டு அழுத்தமான காலடிகளோடு அவளை நெருங்கியது...


ஷிபி ரிதியின் திருமணம் மீண்டும் நடைபெறுமா??

சுர்ஜித் சுட்டது திரைப்பட பதிவுக்காக தானா??
 

Author: நீல தூரிகை
Article Title: அத்தியாயம் 8
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top