அத்தியாயம் 5

Joined
Aug 19, 2025
Messages
10
அத்தியாயம் 5:

அந்தி மாலை நேரம்.. இரவின் இருளும், பகலின் மங்கிய ஒளியும் இணைந்து செவ்வானம் பூசிக் கொண்டிருந்தது அந்த மாலை நேரம் வானம்..

சுற்றி எங்கும் தென்னை மரங்கள், கீழே நெல் வயல்கள், அதற்கு சற்று தொலைவில் பாக்கு மரங்கள், அதற்கு பின்னால் படர்ந்திருந்த மிகப்பெரிய மலை தொடர் பகுதியின் பச்சை பசுமையும், அதன் நடுவே சூரியன் மறைய போகும் அந்த நொடி நேர இடைவெளியில் அத்தனை ரம்மியமாய் இருந்தது அந்த மாலை பொழுது...

அந்நேரம் தன் அறையின் மாடியில் நின்று அனைத்தையும் ரசித்துக் கொண்டிருந்த ஈஸ்வர் அதை லாவகமாகவும் ,சற்றும் அதன் அழகு குறையாதவாறும் தன் பெரிய புகைப்பட கருவி மூலம் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான்..

அவன் அறைக்கு சற்றே தள்ளி அதன் எதிர்ப்புறம் இருந்த தன் தோட்டத்து வீட்டிற்குள் நுழைந்த ரிதி, குளித்து முடித்து கருநீல நிற சுடிதார் அணிந்து கொண்டு தன் கூந்தலை அள்ளி முடித்து சிவப்பு நிற ஒற்றை ரோஜாவை தலையில் சூட்டிக் கொண்டு வெளியே வந்தாள்...

எவ்வித ஒப்பனையும் இன்றி ஜொலிக்கும் அவள் பூ முகத்தில் வழிந்தோடிய அழகினை தன் விழிகளால் மட்டுமல்ல தன் கேமராவிலும் களவாடிக் கொண்டிருந்தான் ஈஸ்வர்..

அவன் எண்ணம் முழுக்க அவள் நிறைந்திருப்பதாலோ என்னவோ அவள் பின்னே சென்று அவளின் ஒவ்வொரு அசைவையும் தனக்குள் உள்வாங்கிக் கொண்டிருக்கிறான் ஈஸ்வர்... அது தான் அவன் வாழ்வையே மாற்றப் போகிறது என்பதை அறியாமல்...

ரிதி சிறிது நேரத்தில் அங்கிருந்த சிறிய வீடு போன்ற அறையில் இருந்து இரண்டு மூன்று வயதான பெண்களை அழைத்துக் கொண்டு வந்து அங்குள்ள கல் திண்டில் அமர வைத்தாள்..

அதன் பின் மற்றொரு அறைக்கு சென்று அங்குள்ள சில குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்து, அனைவரையும் ஒரு சேர அவர்கள் நடுவே இருந்த கிருஷ்ணர் சிலையை சுற்றி அவர்களை நிற்க வைத்து அங்குள்ள கிருஷ்ணர் சிலைக்கு பூஜை செய்ய துவங்கினாள்..

" சிரி தூக்கி கலியடி வா வா கண்ணா
என் குருவாயூரம்பாடி கண்ணா வா...
பொன்னோடே குழலூதி வா வா கண்ணா..
வர்ண மயில் பீலி சூடி வா வா கண்ணா...
கை நிறயே வெண்ண தாராம் வா வா கண்ணா...
நறு நெய்யும் பாலும் தாராம் வா வா கண்ணா...

ஓடாதே ஒலிக்காதே வா வா கண்ணா..
ஓடகுழல் ஊதியூதி வா வா கண்ணா..
அழகோடே நடனமாடி வா வா கண்ணா..
அரோமாலுன்னியாய் வாவா கண்ணா...
முழு திங்கள் கால போல் வா வா கண்ணா...
மழை மேக குளிர் போல வாவா கண்ணா....
முட்டுக்குத்தி கொஞ்சி கொஞ்சி வா கண்ணா...
பிச்சை வச்சு குழஞ்சாடி வாவா கண்ணா.."

என அவர்களின் நடுவே அமர்ந்து கிருஷ்ணர் சிலை முன் நின்று வணங்கி, தன் தேன் குரலில் ராகமிசைத்து பாடி முடித்தாள்...

இசையோடு மட்டும் இன்றி அதற்கேற்ப நளினத்தோடு அழகாய் கதக்காளி நடனம் ஒன்றையும் இரண்டே நிமிடங்களில் ஆடி, பாடி முடித்து அனைவரோடும் சிரித்து கடவுளை வணங்கிக் கொண்டு நின்றாள் ரிதி...

கண்கள் சிமிட்ட கூட மறந்து அவளையே பார்த்து நின்று கொண்டிருந்தான் ஈஸ்வர்.. அவள் இசையா?? நடனமா?? அழகா?? அனைவரோடும் சிரித்து மகிழ்ந்தும் அவள் கண்களில் தோன்றிய ஒருவித வலியோ?? எதுவோ ஒன்று அவன் கண்களை அவளை விட்டு விலக முடியாமல் செய்தது...

ரிதி பாடும் போதே சஜின், கனி இருவரும் அவளின் குரலில் ஈர்க்கப்பட்டு அங்கு நின்று அவர்களோடு ஒருவராய் நின்று கொண்டனர்..

தன் மனம் நிறைந்த கிருஷ்ணருக்கு மனதார பூஜை செய்து, " இங்கு நோயால் அவதிப்படும் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும்.." என வேண்டிக் கொண்டு தன் தங்கை கையால் செய்த இனிப்பு அவள் உருண்டையை எடுத்து அனைவருக்கும் கொடுத்தாள்..

பெரியவர்கள் அவள் தலையில் கை வைத்து மனதார வாழ்த்த, சிறியவர்கள் அவள் கன்னத்தில் முத்தமிட்டு அவளுக்கும் ஊட்டி விட்டனர்...

அதை பார்த்துக் கொண்டே இருந்த ஈஸ்வர் மனம் இன்னதென புரியாத ஓர் நிலையில் இருக்க, கைகளோ அவளை ஆதூரமாய் அணைக்க துடித்தது...

தன் மனம் போன போக்கை எண்ணி கடிந்து கொண்டவன், " ஓ ஷிட்.. இவ நமக்கு தேவையான ஒரு ஆள் அவ்வளவு தான்.. இவ மேல எதுக்கு இவ்வளவு ஈர்ப்பு வருது??" என திட்டிக் கொண்டே அழுத்தமாய் தன் சிகையை கோதிக் கொண்டு பால்கனியில் நின்று அவளை தவிர சுற்றி உள்ள அனைவரையும் பார்க்க துவங்கினான் ஈஸ்வர்...

அந்நேரம் சரியாய் அவனை மேல் நோக்கி பார்த்த ரிதிக்கு, காற்றில் பறக்கும் அவன் சிகையும், விரிந்த விழிகளும் ஒரு கணம் அவளையும் ஈர்க்க, அவனை பார்த்தவள் சட்டென தலை தாழ்த்திக் கொண்டு மற்றவர்களோடு இயல்பாய் பேசி சிரிக்க துவங்கினாள்..

குழந்தைகள் ஆறு பேரும் கை கால் முறிந்த, மன நலம் குன்றியவர்களாக இருப்பதால், அவர்களிடம் அவர்களின் குறையை பெரிதாய் பார்க்காமல் விளையாடி மகிழும் ரிதி மீது அவர்களுக்கு அத்தனை பிரியம்...

ஒரு சிறுவன் அவள் கைப்பிடித்து சுற்ற, அவனோடு கைகளை சேர்த்து மெதுவாய் சுற்றிக் கொண்டே இருந்தவள் விழிகளும் அவ்வப்போது ஈஸ்வரை தொட்டு தொட்டு மீண்டது...

சில நிமிடங்கள் பெரியவர்களை அழைத்து சிறிது தூரம் நடக்க வைத்து பேசி சிரித்து, பின் உணவு உண்ண வைத்து விட்டு அவர்களை அவரவர் அறைக்குள் உறங்க அனுப்பி விட்டு வெளியே வர,

அங்கு கனி, சஜின் இருவருக்கும் முன் கருப்பு நிற டீ ஷார்ட், சந்தன நிற ட்ராக் பேண்ட் அணிந்து கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு நின்றிருந்தான் ருத்ரேஸ்வரன்...

அவனை நெருக்கத்தில் கண்டவள் விழிகள் ஒரு நொடி பயந்து படபடக்க,

அவளை அளவிட்டவாறே விலகி நின்றவன்,
" இப்போ ஒரு பிளான் பண்ணனும்.. அதுக்கு நீ மட்டும் தான் ஹெல்ப் பண்ணனும்.." என அவனின் திடமான குரலில் கூறிட,

சஜின் அதை அவளிடம் மொழி பெயர்க்க,
அவளோ சஜினை பார்த்து, " என்னன்னு கேளுங்க.." என மலையாளத்தில் கூறி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே நின்றாள்..

தன் பாக்கெட்டில் கை விட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வர்," இங்க சுத்தி பார்க்க இருக்கும் இடங்கள் எல்லாம் பார்க்க எப்போ போறது? நீ எப்போ ஃப்ரீ ஆவ? அப்புறம் இங்க சிவன் கோவில் எங்க இருக்கு??" என கேட்க,
அதை சஜின் மொழி பெயர்க்க,

அவளோ அவன் விழிகளின் வீச்சில் சற்றே தடுமாறி, " இங்கன குறைய தூரம் கடந்தெங்கில் சிறிய சிவனின்ட அம்பலம் ஒன்னு உண்டு.." என கூறிக் கொண்டு அங்கிருந்து செல்ல போக,

சட்டென அவள் கைப்பிடித்து தடுத்து அவளை நேருக்கு நேர் பார்த்த ஈஸ்வர், " காலையில் விடிந்ததும் நீ தான் கூட்டிட்டு போகணும்.. எனக்கு வழி தெரியாது..." என கூறி அவள் முகம் பார்க்க,

அவன் விழிகள் தன் விழிகளை தாண்டி எங்கும் செல்லவில்லை என்பதை உணர்ந்தும் அவன் விழிகளின் தாக்கம் அவளை வெகுவாய் தாக்கிட, " ஞான்... ஞான்.. வைகை சமயத்தின்ட சேஷம் வெரான்..." என கூறி அவனை பார்க்க முடியாமல் கைகளை விடுவித்துக் கொண்டு அங்கிருந்து வேகமாய் சென்றாள்..

நடந்ததை பார்த்துக் கொண்டிருந்த கனிக்கு அவன் செயல் புதிதாய் தோன்ற, அதிர்ச்சியில் தொண்டை குழி விக்க துவங்கியது..

ஆம் இதுவரை லிகிதாவை ஒரு முறை கூட இத்தனை அழுத்தமான பார்வையில் பார்த்தது இல்லை ஈஸ்வர்.. அத்தோடு தன் படத்தில் நடிக்கும் நடிகைகள் கைகளை என்ன அவர்கள் நிழலை கூட தொட்டது இல்லை.. அத்தனை கண்ணியமானவன் இன்று ரிதியிடம் இவ்வாறு நடந்து கொள்வது அவனுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுக்காமல் இருந்தால் தான் அதிசயம்....

அவள் கூறி சென்றதை சஜின் மொழி பெயர்க்கும் முன், " ஐ நோ.. " என கூறிக் கொண்டு மீண்டும் தன் அறைக்கு சென்றான்..

அங்குள்ள தன் டைரியில் அவள் பாடி, ஆடிய விதம், அவள் விழிகளில் தோன்றிய ஒரு வித வலி, தன் கண்களை பார்க்க தடுமாறிய அவள் விழிகள் என அனைத்தையும் எழுதி முடித்தவன் மீண்டும் அவளை காண எண்ணி பால்கனி அறையிலேயே நின்று கொண்டிருந்தான்..

அவன் தவம் பொய்த்து போனது போல, அங்கு உள்ளே சென்ற ரிதியோ தன் தங்கை, தாத்தா இருவரோடும் பேசிக் கொண்டு வெளியே வரவே இல்லை..

சுற்றி சுற்றி சில நிமிடங்கள் நடந்தவன் கண்களில் விழுந்தது ரிதியின் மடியில் தலை சாய்த்து படுத்திருக்கும் ஒரு பெண்ணும், அவள் காலை அவள் தாத்தா அழுத்தி பிடித்து கண்ணீரை துடைத்துக் கொண்டிருக்கும் அந்த காட்சியும்..

அவர்கள் என்ன பேசுகிறார்கள் என தெரியவில்லை.. ஆயினும் மூவரும் ஏதோ ஒரு துன்பத்தில் இருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாய் புரிந்து போனது ஈஸ்வருக்கு..

அதுவரை அவளை எண்ணி கர்வமாய் கல்லென திடமாய் திமிறிக் கொண்டு இருந்த அவன் மனதில் சற்றே ஈரம் கசிந்து போனது, தன்னால் தான் பிரச்சனையோ என..

பின் நாளை அவளிடம் தனியாய் அனைத்தையும் பேசி விட முடிவு செய்து விட்டு அவள் விழிகளை காண ஆவல் கொண்டவனோ சற்று நேரம் எட்டி எட்டி பார்க்க,

ஜன்னலின் வழியே அவனை திரும்பி பார்த்தவள் கோபமாய் எழுந்து ஜன்னலை சாற்றி விட்டு சென்றாள்..

இம்முறை ஏனோ அவள் மீது கோபம் வராமல், " சில்லி கேர்ள்..." என திட்டிக் கொண்டே உள்ளே வந்து மெத்தையில் சரிந்தவன் விரைவாய் உறங்கிப் போனான்...

அதிகாலை நேரம் வெகு விரைவாய் எழுந்து தன் கிருஷ்ணரை வணங்கி விட்டு ஈஸ்வர் வீட்டின் வாசலுக்கு அருகே சென்ற ரிதி கதவை தட்ட விரும்பாமல் திரும்பி செல்ல பார்க்க,

" ஐ ஆம் ஹியர் மிஸ் சம்ரு.. ஷால் வீ மூவ்??" எனும் கணீர் குரலில் அதிர்ந்து திரும்பினாள்...

தன் முதுகின் பின்னால் கேட்ட சிம்மகுரலின் அதிர்ச்சியில் வேகமாய் திரும்பிட, படியில் கால் இடறி சாய்ந்து அங்குள்ள கைப்பிடி சுவரின் மேல் கை வைக்க,

இடையில் கையை ஊன்றி நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனோ இம்முறை அவளை தாங்கி பிடிக்கவில்லை..

எவ்வித பதட்டமும் இன்றி, " நல்லா தான் இருக்க வா போலாம்.. கார் அங்க இருக்கு..." என கூறி முன்னே செல்ல,

அவளோ, " ஷெரியாய் அஹங்கார ஆளானு" என திட்டிக் கொண்டே அவன் பின்னே சென்றாள்..

அவன் காரில் ஏறி அமர, அவளோ காரை கடந்து நடக்க துவங்கினாள்..

" ஓ ஷிட்.. திமிரு பிடிச்சவ.. காலையிலேயே ஆரம்பிச்சுட்டா.. எல்லோர் கிட்டயும் அன்பா பேசுறவ என்ன பார்த்தா மட்டும் ஏன் இப்படி மாறுறா??" என வாய்விட்டு திட்டிக் கொண்டே அவள் பின்னே நடக்க துவங்கினான் ஈஸ்வர்...

வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில் தன் கண் முன் ஆண்மைக்கே உரிய அத்தனை கம்பீரமும் கொண்டு, கருமையும் செம்மையும் கூடிய மாநிற தேக்கு தேகத்தில், தன் மாயக்கண்ணனை போல் நின்ற அவன் முகத்தை எண்ணிக் கொண்டே நடந்தாள் ரிதி...

அந்நேரம் அவள் பின்னே " ரிதி.. நிக்கு.. ஈ ஆள் ஆறானு?? நினக்கு எந்த ஜோலி இவிட?? அதும் ஈ வைகையாயிட்டு சமயத்தில்??" என சட்டென கோபமாய் கேட்ட ஒரு குரலில் அதிர்ந்து, நிற்க கூட பயந்து அதிர்ச்சியில் உடல் நடுங்க உறைந்து நின்றாள் ரிதி..

பயத்தில் அவள் உடல் நடுங்குவதை கண்ட ஈஸ்வருக்கு ஏதோ ஓர் உந்துதல் தோன்ற அவளை நெருங்கி நின்ற ஈஸ்வர், " ரிலாக்ஸ் சம்ரு.. நான் இருக்கேன்.." என அவள் கைப்பிடித்து அவளை தன் தோளோடு அணைத்துக் கொண்டு நின்றான் ஈஸ்வர்..

ரி
தி அந்த குரல் கேட்டு அச்சப்பட காரணம் என்ன?? அதை அறிந்த ஈஸ்வர் அவளை காப்பானா?? தன் கடமையை மட்டும் எண்ணி விலகி விடுவானா??
 

Author: நீல தூரிகை
Article Title: அத்தியாயம் 5
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top