- Thread Author
- #1

மழைச்சாரல் இதமாய் தூறிக் கொண்டிருக்க, அவளுக்கு எதிரில் உர்..... உர்..... உர்ர்ர்ர்......... என்ற பைக்கின் சத்தம் கேட்டு எரிச்சலாக குடைக்குள் இருந்து நிமிர்த்து பார்த்தாள் மலர்விழி. அவள் கண்களை மூடி திறக்கும் அந்த கணத்திற்குள் மறைந்தது அந்த பைக். கோபத்துடன், நெற்றியை சுளித்துக் கொண்டு,
"எப்படி போறான் பாரு, அறிவே இல்ல இவனுக்கெல்லாம். கொஞ்சம் ஸ்லோவா போனா தான் என்ன? இங்க என்ன பைக் ரேசிங்கா நடக்குது? யாருக்காவது ஏதாவது அடிபட்டா என்ன பண்ணுவான்? அறிவு கெட்டவன்"
என்று அவளுடைய உதடு முணுமுணுத்துக் கொண்டே பஸ் ஸ்டாப்பில் பஸ் வருகிறதா? என்று எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க, மீண்டும் உர்ர்ர்ர்...... என்று சீறி கொண்டு அவள் முன் வந்து நின்றது அந்த பைக். அந்த பைக் வந்து நின்ற வேகத்தில் அவளுடைய துப்பட்டா பறக்க, அதை சரி செய்து விட்டு குடையை தூக்கி, அவள் அந்த பைக்கை பார்த்தாள். அப்போதுதான் அவர்களின் முதல் சந்திப்பு ஏற்பட்டது.
"இந்த வழியா போகும்போதே பார்த்தேன். என்ன, என்னைய திட்றியா நீ? இது என்னோட பைக், நான் எப்படி வேணா போவேன். ஏதோ உங்க அப்பா போட்டு வச்ச ரோடு மாதிரி பேசுற?"
என கண்களில் திமிருடன், ஒரு வித நக்கல் சிரிப்புடன் பேசினான் அவன்.
மலர்விழிக்கோ,
கோபம் தொண்டை வரை வர, கோபத்தை பொறுத்துக் கொண்டு, அவள் புருவத்தை தூக்கியவாறு கண்களால் அவனை சுட்டெரித்தாள்.
"என்ன வாய் பேச மாட்டியா? இப்படி முறைச்சு பார்த்தா நான் பயந்துடுவேனா? நான் அப்படி தான் வேகமாக போவேன். என்னடி பண்ணுவ?"
என அவன் கேட்டது தான் தாமதம், அணை போட்டு தடுத்து வைத்திருந்த அவளுடைய கோபம், அணையை உடைத்து சீறி பாயும் வெள்ளம் போல்,
வெளியில் வந்து கொட்டியது. கோபத்தை வார்த்தையால் கொட்டி தீர்த்தாள்.
"பேசாம அமைதியா இருக்கேன்னு, அப்படியே அமைதியாவே இருந்துடுவேன்னு நினைச்சியா? ரொம்பத்தான் ஓவரா பேசுற? இவ்ளோ பாஸ்ட்டா வரயே யாருக்காவது ஏதாவது ஆச்சுன்னா நீ தான் பொறுப்பு. உன்னோட திமிருக்கு அடுத்தவங்க உயிர் போகணுமா? உன் திமிரு, தலைகணம் எல்லாம் உன் வீட்டோட வச்சுக்கோ. வெளிய வந்தா பைக் எடுத்துட்டு சீறிப்பாயிறது, திமிரா பேசுறது இதெல்லாம் என்கிட்ட வச்சுக்காத. அப்புறம் நான் பேச ஆரம்பிச்சா, நீ தாங்க மாட்ட. என்ன அமைதியாயிட்ட? நீ பேசினதும் பயந்து போயிடுவேன்னு நினைச்சியா? இன்னொரு டைம் இந்த ரோட்ல பாஸ்ட்டா போய் பாரு அப்புறம் இருக்குது உனக்கு"
எனச் சொல்ல,
(என்ன இவ சரவெடி மாதிரி படபடன்னு வெடிக்கிறா)
என அடங்கிப் போய் அமைதியாய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அதற்கு பிறகும் மலர்விழி பேச வரும்போது, அந்த நேரத்தில் ஒரு பஸ் வந்து நின்றது. அவனை திரும்பிப் பார்த்து முறைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினாள்.
அவள் கிளம்பியதும், அவனும் பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான். ஆனால் மௌனமாக, பைக்கை கூட மெதுவாக ஓட்டிச் சென்றான். அவள் திட்டியதும், அவளுடைய பார்வையும், அவளுடைய தைரியமும் அவனுக்குள் ஏதோ செய்தது. ஆனால் என்னவென்று அவனுக்கு தெரியவில்லை. பைக்கில் திரும்பும் வேளையில் எப்போதும் அவன் ஹாரனை தொடர்ந்து அடித்துக் கொண்டே போவான். அதை ஒரு ஸ்டைலாக நினைத்து செய்வான். அப்போதும் அதை செய்யலாம் என்று கை ஹாரனை தொட முற்படும் போது, திடீரென அவள் முகம் கண் முன் வந்து சென்றது.
"ஐயோ வேணா, எங்கிருந்தாவது அவள் வந்துடுவா. அப்புறம் தையா, தக்கான்னு குதிப்பா. தேவையா இதெல்லாம்? ஆமா, நம்ம எதுக்கு அவளுக்கு பயப்படணும்? அது என்னமோ தெரியல? அவ கண்ண பார்த்தாவே பயமா இருக்குது. அவ கண்ண பாக்கவே முடியல. என்ன முறை முறைக்கிறா? பொண்ணா அவள்? சரியான சரவெடி"
என திட்டிக் கொண்டு அவன் வீட்டிற்கு சென்றான்.
இங்கு மலர்விழி பஸ்ஸில் ஏறியவுடன், அவளுடைய தோழி நந்தினி,
"ஹாய் மலர், என்னடி பஸ் ஸ்டாப்ல அந்த பையன பார்த்து அப்படி முறைக்கிற? என்ன உனக்கும், அவனுக்கும் ஏதாவது சண்டையா?" (நந்தினி)
"ச்சே, ச்சே.... அவன் யாரோ, நான் யாரோ? அவனை யாருன்னு கூட எனக்கு தெரியாது" (மலர்விழி)
"அப்புறம் ஏன்டி அப்படி முறைச்ச?" (நந்தினி)
"அது ஒரு சின்ன பஞ்சாயத்து. நான் அப்புறமா உனக்கு சொல்றேன். காலையிலேயே மூட்டவுட் பண்ணிட்டான். கடுப்பா இருக்குடி" (மலர்விழி)
"என்ன மலர் இப்படி சொல்ற? நான் வீட்ல இருந்து டல்லா வந்தா கூட, ஜாலியா இருக்கணும், இந்த டே நம்மளோட டே, எப்போவுமே ஹாப்பியா இருக்கணும், லைஃப் ஈஸ் ஷாட். அப்படி எல்லாம் சொல்லுவ? அவ்ளோ எனர்ஜிடிக்கான, ஜாலியான பொண்ணு நீ. நீயே டென்ஷன் ஆகுற? அந்த அளவுக்கு அவன் உன்ன டென்ஷன்
பண்ணிட்டானோ?" (நந்தினி)
"அவன் என்ன சாதாரணமா நினைச்சிட்டான். ஆனா நான் யாருன்னு அவனுக்கு தெரியல" (மலர்விழி)
"அதான பார்த்தேன்? மலர்விழி எந்த இடத்திலும் பயப்பட மாட்டாளே?" (நந்தினி)
"அது தான் மலர்விழி" (மலர்விழி)
"என்ன மலர் உனக்கு இந்த வேலையெல்லாம் பிடிச்சிருக்கா?" (நந்தினி)
"ஏதோ பிடிச்சிருக்கு. வேற வேலைக்கும் போக முடியாது. சோ கொஞ்ச நாளைக்கு இந்த வேலைக்கு தான் போகணும். உனக்கு எப்படி நந்தினி? இந்த வேலை பிடிச்சிருக்கா?" (மலர்விழி)
"எனக்கு இந்த வேலைய பத்தி சுத்தமா ஐடியாவே இல்ல. நீ சொன்னதுக்காக தான் நானும் இங்க வந்தேன். அதுவும் உனக்காக தாண்டி வந்தேன். காலேஜ்ல நம்ம ஒண்ணாதான் படிச்சோம். இப்போ வேலை செய்ற இடத்துலயும் ஒண்ணாவே வேலை செய்யறோம். சோ எனக்கு கம்ஃபர்டபுலா இருக்கும்ல. அதுமட்டுமில்லாத உன் கூட இருக்கும்போது ஜாலியா இருக்கும்" (நந்தினி)
"அது ஓகே தான் நந்தினி, ஆனா எப்பவுமே நம்ம கம்ஃபர்டபுலா இருக்கணும்னு நினைக்க கூடாது. நம்ம ஒரு இடத்துல கம்ஃபர்ட்டபுலா இருக்குறோம்னா அந்த இடத்திலேயே தேங்கி போயிடுவோம். நம்ம எப்பவுமே நீரோடை மாதிரி அடுத்தடுத்த இடத்துக்கு போய்கிட்டே இருக்கணும்னு நினைக்கணும்" (மலர்விழி)
"சோ இப்ப என்ன சொல்ல வர?" (நந்தினி)
"இல்லடி, நம்ம அடுத்தடுத்த ஸ்டேஜ்கு போகணும்னு சொல்ல வரேன். உனக்கு ஏதாவது வேலையில டவுட்னா என் கிட்ட கேளு" (மலர்விழி)
"நம்ம பேசிட்டு இருந்த டைம்ல ஸ்டாப் வந்ததே தெரியல, வா போலாம்" (நந்தினி)
மலர்விழியும், நந்தினியும் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
"ஹலோ மலர்விழி!!!, ஹாய் நந்தினி!!! தோழிகள் ரெண்டு பேரும் ஒண்ணாவே வந்துட்டீங்க போல?"
"எப்ப சார் நாங்க பிரிஞ்சு வந்திருக்கோம். ஒன்னா தான வருவோம்?" (நந்தினி)
"சரிம்மா வரது, போறதெல்லாம் ஒண்ணாவே இருக்கட்டும். ஆனா வேலை செய்யற நேரத்துல ஒண்ணா இருந்தீங்கன்னா பேசிகிட்டு தான் இருப்பீங்க. தனித்தனியா பிரிஞ்சு வேலைய பாருங்கம்மா"
"என்னடி இவரு வந்ததும் இப்படி சொல்றாரு? என்னமோ நம்ம வேலை செய்யாம பேசிக்கிட்டே இருக்க மாதிரி?" (நந்தினி)
"அவர விடு. அவருக்கு என்ன, நம்ம வேலை செஞ்சா போதும்ல? நம்ம ஈவினிங் போகும்போது பேசிக்கலாம்" (மலர்விழி)
என இருவரும் ஆளுக்கொரு திசையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நேரம் வேகமாக ஓடியது. இருவரும் வீட்டிற்கு செல்லும் நேரமும் வந்தது. இருவரும் பஸ்ஸில் ஏறி வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.
"சரி மலர்விழி, நாளைக்கு கொஞ்சம் சீக்கிரமாவே வந்துடு. நானும் சீக்கிரமா வந்துடுறேன் டி"
"அப்போ இன்னைக்கு நம்ம போன பஸ்ல போக முடியாதடி"
"ஆமா, அதுக்கு முன்னாடி வர பஸ்ல வந்துடு, நானும் அதுக்கே வந்துடறேன். ஏன்னா ஒர்க் கொஞ்சம் அதிகம் இருக்கு. சரி பாய் மலர்"
"ஓகே நந்தினி, பாய்"
என அவள் பேசி முடித்து கிளம்பும்போது, மலர்விழியின் அப்பா ராகவன் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார்.
"என்னம்மா வேலையெல்லாம் முடிஞ்சுதா? இன்னைக்கு ரொம்ப சோர்வா இருக்கியே?"
"அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா, கொஞ்சம் வொர்க் அதிகம்"
"ஏம்மா நீ வேலைக்கு போய் இந்த வயசுலருந்து கஷ்டப்படணுமா?"
"அப்பா நீங்க என்ன சொல்லிருக்கீங்க? படிச்சு முடிச்சுட்டு பொண்ணுங்க வேலைக்கு போகணும், அவங்க சொந்தகால்ல நிற்கணும்னு தானே சொல்லி கொடுத்தீங்க? அப்புறம் என்னப்பா நீங்களே இப்படி பேசுறீங்க?"
"அது..... நீ கல்யாணம் பண்ணிட்டு, அதுக்கப்புறம் வேலைக்கு போம்மா. இங்கிருந்து ஏன் கஷ்டப்படணும்? அப்பா நான் தான் இருக்கேன்ல? பாத்துக்க"
"என்னப்பா சொல்றீங்க? வீட்ல எத்தனை பேர் இருக்காங்க? உங்க ஒருத்தர் சம்பளம் எப்படிப்பா பத்தும்? இப்ப மில் எல்லாம் சரியா ஓடுறது இல்லன்னு சொன்னீங்க. அங்க இருக்கவங்களுக்கு கூட சரியா சம்பளம் கொடுக்க முடியலன்னு கூட சொன்னீங்க. பாவம் பா நீங்க, என்ன படிக்க வச்சு, அண்ணனை படிக்க வச்சு, இவ்வளவு தூரம் ஆளாக்கிருக்கீங்க. என்னால முடிஞ்ச சின்ன உதவிதான் பா இது"
மலர்விழியின் அப்பா ராகவன். ஒரு மில் வைத்திருக்கிறார். நன்றாக ஓடிக் கொண்டிருந்த மில் தான், ஆனால் இப்போது சரியாக வருமானம் வருவதில்லை.
"உனக்கு அப்பா மேல எவ்வளவு பாசம் இருக்கு. ஆனா வீட்ல ஒருத்தன் இருக்கானே"
"யாரப்பா சொல்றீங்க?"
"அதான் உங்க அண்ணன் மதன். மூத்த பையன் தான் பேரு. கொஞ்சம் கூட அதற்கான பொறுப்பு அவன் கிட்ட இருந்ததே இல்ல"
"அவன் என்னப்பா பண்ணுவான்? அவனும் வேலை தேடிக்கிட்டு தான் இருக்கான். அண்ணனுக்கு வேலை கிடைக்க மாட்டேங்குது"
"நீ மட்டும் படிச்ச வேலைக்காம்மா போற? படிச்சதுக்கு தான் வேலைக்கு போகணும்னா முக்காவாசி பேரு வேலைக்கு போக முடியாது. வீட்டு சூழ்நிலை என்னவோ? அதை புரிஞ்சுகிட்டு வேலைக்கு போக வேண்டாம்"
"விடுங்கப்பா, அதான் நான் வேலைக்கு போறேன்ல? அண்ணனுக்கு வேலை கிடைச்சதும் அவனும் போவான்"
"அட போம்மா, நீ எப்பவும் உங்க அண்ணன விட்டுக் கொடுக்காமலே பேசு"
என இருவரும் பேசிக்கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.
வீட்டுக்குள் சென்றதும் சாவித்திரி, சீரியல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சாவித்திரி ராகவனின் தங்கை. அவளுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்தார்கள். ஆனால் அந்த வீட்டில் அவளுக்கு வாழ பிடிக்கவில்லை என்றும், அவளுடைய கணவன் அவள் மேல் அக்கறையாக இல்லை என்றும், திருமணமாகி இரண்டு, மூன்று வருடங்களிலேயே குழந்தையை தூக்கிக்கொண்டு இந்த வீட்டிற்கு வந்தவள். அதன் பிறகு அங்கு போகவே இல்லை. இங்கேயே இருந்துவிட்டாள். எல்லோரிடமும் பாசமாக இருப்பவள் தான். ஆனால் மலர்விழி போல் அவளுடைய மகளுக்கு எதுவுமே கிடைக்கவில்லை என்ற பொறாமையும், அவ்வப்போது வந்து போகும். அதுமட்டுமில்லாமல், அவளுடைய மகளை நன்றாக படிக்க வைத்து, பெரிய இடத்தில் கட்டி கொடுக்க வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறாள். அவள் ஆடம்பரமான சொகுசு வாழ்க்கையில் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அவளுக்கு கிடைக்காத வாழ்க்கை, அவளுடைய மகளுக்காவது கிடைக்க வேண்டும் என்று கனவு காண்கிறாள். அவளுடைய அம்மா வீட்டிற்கு வந்தும், எந்த வேலையும் செய்யாமல், அண்ணியே எல்லா வேலையும் செய்யட்டும், என்று அவள் இங்கும் சொகுசாக தான் இருக்கிறாள். ஆனால் எப்போதும் அவளுடைய வாழ்க்கையை பற்றி எல்லோரிடமும் புலம்பிக்கொண்டே இருப்பாள். அதனாலேயே ராகவனின் மனைவி அவளுடன் அதிகமாக பேசிக் கொள்வதில்லை.
தொடரும்.........
என் கதையை படித்து விட்டு கமெண்ட் பண்ணுங்க.
Last edited:
Author: Anu1997
Article Title: எபிசோட் 1
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: எபிசோட் 1
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.