முள் நேசம் - 7

Joined
Aug 19, 2025
Messages
8
வேலை என்ற பெயரில் அன்று முதல் முல்லைக்கு தொடங்கியது சோதனைக்காலம்.

லாவண்யா அவளை இங்கு அதே பணியில் உள்ள ராஜாமணி, விமலா போன்றோரிடம் சொல்லி விட்டு தான்‌ போயிருந்தாள்.

இவளும் சேலையை இடையில் சொருகிக் கொண்டு மாப் ஸ்டிக்குடன் அவள் வேலையை பார்க்க, "ஹை கிளாஸ் வேலைக்காரியா இருப்பா போலயே!" என வார்டு பாய் முதல், மருத்துவர், நோயாளிகளின் அன்டென்டர் வரை இவளை சிலர் வாயை பிளந்து பார்த்தனர்.

"ஏன்யா நாங்க எல்லாம் நல்ல சேலை கட்டக்கூடாதா இல்லை எங்களை அழகு படுத்திக்க தான் கூடாதா?" ராஜாமணி வாயை திறந்து கேட்டே விட்டார்.

முல்லையை விசிலடித்தபடி பார்த்திருந்த இரு இளம் ஆண்‌ மருத்துவர்களும், அவரின் பேச்சில் ஒன்றும் தெரியாத போல போய்விட்டனர்.

"அழகை ரசிச்சா தப்பா?" வார்டு பாய் நடராஜ் முல்லையை ஒரு திணுசாக கண்டு சொல்லி விட்டு போனான்.

"லாவண்யா மேடமுக்கு தெரிஞ்ச பொண்ணு‌. மூஞ்சிலயே ஆபரேஷன் பண்ணி விட்றுவாங்க!" விமலா கத்தியது எல்லாம் அவன் காதில் கேட்டதாக கூட தெரியவில்லை.

அந்நேரம் ரவுண்ட்ஸ் முடித்து வந்த ஆதிஷ், "வாட்ஸ் ஹேபனிங் ஹியர்?" என கேட்டது தான் தாமதம் முல்லை திரும்பாமலே அவன் குரலில், கையில் இருந்த மாப் ஸ்டிக்கை தரையில் விட்டு விட்டாள்.

அதன் விளைவாக அவள் அதனை எடுக்க குனிந்து நிமிர வேண்டிய நிலை.

மற்ற இருவரோ தங்கள் பின்னிருந்து கேட்ட குரல் தங்கள் இளைய முதலாளியுடையது என்றுணர்ந்தவர்கள் பவ்யமாக திரும்பினர்.

"சார் புது பொண்ணு. அதான் எல்லாம் வெறிக்க வெறிக்க பார்க்கிறாங்க!" என்றார் விமலா.

"ஆமா சின்ன பொண்ணா வேற இருக்கா..." என்றார் ராஜாமணி.

"அதுக்கு என்ன பண்ணலாம் பால்வாடி வச்சு நடத்துவோமா?" இவன் கேட்டதும் அவ்விருவருக்கே வார்த்தை வரவில்லை.

"வார்டு பாய் நடராஜ் ரொம்ப மோசமா பார்க்கிறான்னு சொன்னா என்ன தம்பி இப்படி கேட்கிறீங்க?" இவன் தந்தை மருத்துவமனை பொறுப்பை பார்த்து வந்த காலகட்டத்தில் இருந்து பணிபுரியும் ராஜாமணி கேட்ட போது, உதடு குவித்து மூச்சை வெளியே விட்டான் ஆதிஷ்.

"இதோ பாருங்கமா‌ அதான் நீங்களே சொல்றீங்களே பொண்ணு புதுசுனு. அதனால அப்படி பார்ப்பாங்க. பழக பழக இப்படியே இருந்தாலோ பிராப்ளம் பண்ணாலோ சொல்லுங்க. அன்ட் இந்த பொண்ணை முதல் உங்களை போல கோட் போட்டு வேலையை பார்க்க சொல்லுங்க!" என்றவன் பார்வை அவள் இடையில் மைக்ரோ செகன்ட் தொட்டு‌ மீண்டதாக முல்லைக்கு தோன்றியது.

உடனே தன் இடைப்பக்க சேலையை அவனை முறைத்து விட்டு சரி செய்து கொண்ட முல்லைக்கொடி, இவன் கண்களில் அகப்படாது இல்லை.

"சரிங்க சார். இவ அளவுக்கு யூனிஃபார்ம் இல்லை. அளவு சொல்லி இருக்கோம். வந்ததும் கொடுக்கிறதா சொன்னாங்க!" என்றார் விமலா.

இவனோ முல்லையை பார்வையில் அளந்து முடித்தவன், "இப்போதைக்கு இருக்கிற சைஸை போட கொடுங்க!" என்றான்.

அது இவளுக்கு எத்தனை பெரிதாக இருக்குமென தெரிந்து பேசுகிறாரா இல்லை தெரியாது பேசுகிறாரா? என புரியாது அவனை பார்த்த இரு பெண்களும் தலையசைத்து அங்கிருந்து நகர்ந்தனர்.

அவர்களை தொடர்ந்து முல்லையும் நகரப்போன வேளை ஆதிஷ், "ஹே யூ... கம் டு மை கேபின்!" என்றான்.

முல்லைக்கொடி அவனை பக்கவாட்டில் பார்த்தவள், "முடியாது!" என்றாள் முகம் சுருக்கி.

"வாட்? உன்னை என் கேபினுக்கு வர சொல்றேன். அதாவது புரியுதா?" அவன் பல்லை கடித்து விளக்கமாக கேட்டால் மட்டும், அவள் பதில் என்ன மாறி விடவா போகிறது.

"அதுக்கு தான் நானும் முடியாது சொன்னேன் சார். உங்க ரூமுக்கு நீங்க இருக்கும் போது போகக்கூடாதுனு லாவண்யா அக்கா உங்க முன்ன தானே சொன்னாங்க!" என்றாள்.

"ஹே... ஹே... உன் லாவண்யா அக்காவே இங்க வேலை பார்க்கிற டாக்டர் அவ்ளோ தான்டி. உங்க எல்லாருக்கும் வேலை தந்து, சம்பளம் தர்றதே நான் தான். என்னையே எதிர்த்து பேசுற!" என்றான்.

முல்லை பதில் கூறாது விழிகளை உருட்டி அவனையே பார்த்திருந்தாள்.

"நீ மட்டும் இப்ப வரலைனு வை நான் அவக்கிட்ட உனக்கு வேலை இல்லைனு சொல்லுவேன். அவளும் வேலையை விட்டு போறேன்னு சொல்லுவா. அப்புறம் அவ வேலையும் போய்டும். ஃபிரண்ட்ஷிப்பும் போயிடும். அதுவும் உன்னால!" என்றான்.

முல்லைக்கு உடனே முகம் வாடிவிட்டது.

"அவ பர்த்டே அதுவுமா அவளுக்கு இந்த புது வருஷத்துல கஷ்டத்தை மட்டும் தரவே அவ லைஃப்ல வந்திருக்கியா நீ? என் உசுரை எடுக்கிறது போதாதா?" அவன் பேச பேச அழும் நிலைக்கே வந்தவள் அவன் கேபின் நோக்கி நடந்தாள்.

"எப்படி என்னையே முந்திட்டு போறா பாரு!" அவளை திட்டிக் கொண்டே தன் கேபினுக்கு சென்றான் இவனும்.

உள்ளே தான் முல்லை கைக்கட்டி இவன் இருக்கை முன் நின்றிருந்தாள்‌.

இவன் கதவு திறந்து உள்ளே வந்தவன், அவளை பார்த்தபடி சென்று தன் இருக்கையில் அமர்ந்தான்.

இரவு நேரம் என்பதால் அவனுக்கு பார்க்க வேண்டிய பேஷன்ட்கள் யாரும் இல்லை. அவன் அபாயின்மன்ட் எல்லாம் எட்டு மணி வரை தான். அதிக பட்சம் அவசரம் என்றால் ஒன்பது மணி. அதன் பின் மருத்துவமனையை ரவுண்ட்ஸ் பார்த்து விட்டு அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை என ஏதும் இல்லாத பட்சத்தில் கிளம்பி விடுவான்.

இன்றும் அதே கதை தான். ரவுண்ட்ஸ் முடித்து வந்தவன் முல்லையினால் வந்த சலசலப்பை காதில் வாங்கிக் கொண்டு, அவளை இங்கு வர வழைத்து தன் முன் நிறுத்தி இருக்கிறான்.

சுழல் நாற்காலியில் அரை வட்டமாக சுழண்டு கொண்டே இவன் அவளை கண்ட பார்வையில் முல்லைக்கு தேகம் சில்லிட்டது.

அதிலும் அமர்ந்திருந்தவன் பார்வை சரியாக அவள் இடைப்பகுதியில் படுவது போல உணர்ந்தவள், வழுக்கிடும் சேலை மெட்டிரியலால் ரொம்பவும் தவித்து போனாள்.

அதன்‌ பின்னரே, 'தன் இடை தன் உரிமை!' என அவள் சேலையை இழுத்து விட்டுக் கொள்ள. அவன் முகத்திலோ ஒரு எள்ளல் புன்னகை.

அதனையும் கண்டு கொண்டு எரிச்சலுற்றவள், "இப்போ எதுக்கு சார்‌ என்னை வர சொன்னீங்க?" என கேட்டாள். அவள் முகத்தில் அத்தனை கடுகடுப்பு.

"ஹான்... நீ சேலை கட்டி இருக்க அழகை பார்க்க!" என்றான் ஆதிஷ்.

"சார்..." அவள் சிறு குரலில் கத்த.

"சும்மா கத்தாதடி. மூட வேண்டிய இடத்துல, மூட வேண்டிய நேரத்துல மூடி இருக்கணும்!" என்றான்.

"அதானே பார்த்தவனை விட்டு பொண்ணுங்க கிட்ட தானே எப்பவுமே வருவீங்க..." என்றவள் அழுகையை அடக்கி மூக்கை உறிந்தாள்.

ஆதிக்கோ நேற்று அவள் இடுப்பில் பட்ட தன் கரத்தை நினைத்தே கோபம்‌. வேகமாய் அந்த கை விரல்களை மடக்கி கண்ணாடி மேசையில் அவன் குத்தவும், முல்லை மிரண்டு ‌போய் அவனை பார்த்தாள்.

"குனிஞ்சு நிமிர்ந்து வேலை செய்யற மேடம் கொஞ்சம் டிரஸ்ஸிங்ல கவனமா இருக்கத்தான் வேணும்!" என்றான் பல்லை கடித்தபடி.

"எங்க ஊர்ல கூட தான் தண்ணி எடுக்கவும், விறகு எடுக்கவும் தாவணில போயிருக்கேன்..." என்றாள் முல்லை விசும்பிக் கொண்டே.

"அங்க உள்ளவன் எப்படினு எனக்கு எப்படிமா தெரியும்!" என கேட்டான் நக்கலாக‌.

அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

"இப்ப இருக்க போல அப்ப உன் சேரீ இல்லையே. மிட்ல கர்வ் வரை தெரிஞ்சிட்டு இருந்தது..." என்றவன் விரல்கள் வளைந்து அவளுக்கு வரைப்படம் போட்டு விளக்க.

அதிர்ந்து விழி விரித்து நின்ற முல்லை, "ச்சீ... நீங்க ரொம்ப கெட்ட சார்!" என்றாள்.

ஆதிஷ் அவளை தீயாக முறைத்தான்.

"ஆமா ஊர் உலகத்துல இல்லாத அழகி நீ. அதுசரி நான் தான் ரொம்ப கெட்டவன்ல. உன் ஊர் ஆளுங்க சொன்ன போல உன்னை கட்ட முன்னவே உன்கூட எல்லாம் பண்ணிட்டனே!" என்றான்.

இம்முறை முல்லை கண்களில் தேங்கி தேங்கி வழியாது போன கண்ணீர் சொட்டு சொட்டாக கன்னத்தில் இறங்கியது.

ஆதிஷ் தன் கண்களை அழுத்தமாக மூடிக் கொண்டவன் சில வினாடி கழித்து திறப்பதற்குள், அவளின் விசும்பல் சத்தம் தான் அந்த அறையில் எதிரொளித்துக் கொண்டிருந்தது.

விழி திறந்தவன் சில கணம் அவளை பார்த்தான். அவள் அழுதால் தனக்கு நேர்ந்த கொடுமைக்கு பின் கிடைக்கும் நிம்மதி என்றே மூளை சொன்னது. என்ன பழிக்கு பழி என்ற முடிவில் இருந்தவனால் மோதும் இடம் சிறியது என்பதால் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை.

"இதோ பாரு. சும்மா அழுது அழுது உன் ஊரை வேணா ஏமாத்தலாம். என் ஃபிரண்ட்ஸை வேணா ஏமாத்தலாம். ஆனால் என்னை எல்லாம் முடியாது. தாலியா கட்ட வைக்கிற தாலி. உன்னை இந்த ஊரை விட்டே ஓட வைக்கிறேன்டி!" என்றான்.

முல்லை பதிலே பேசவில்லை. அவன் சொல்வதும் உண்மை தான் என்ற நிலையில் பேச வார்த்தைகள் வரவும் இல்லை.

"ம...மன்னிச்சிடுங்க அ...அன்னிக்கு ப...பயத்துல..." பயந்து கொண்டே ஏதோ சொல்ல வந்தாள்.

அதற்குள் அவள் மேலும் அஞ்சும் விதமாக மேசையை சத்தமாக தட்டியபடி தன் இருக்கையை விட்ட் எழுந்து நின்றான் ஆதிஷ்.

மன்னிப்பு கேட்க வந்தவள் வாய் தானாக மூடிக் கொண்டது.

"உன் மன்னிப்பால எனக்கு நடந்த அசிங்கம், டிராமாவுல இருந்து வெளிய வர முடியுமா என்னால?" கர்ஜித்து கேட்டவன் ஒலியில் இவள் தலை தானாக மறுத்து அசைந்தது.

"அதெல்லாம் போதாதுனு இப்போ என் கண் முன்னவே இருக்க... இரு ஆனால் என் ஆத்திரம் தீர என்கிட்ட அனுபவிச்சுட்டே இருக்கணும். புரியுதா?" அவன் கேளவும் முல்லை அதற்கும் தலையசைத்தாள்.

"குட்! இது எல்லாம் நமக்குள்ள இருக்கணும். லாவண்யா காதுக்கு போனா நான் அவளோட பேசவே மாட்டேன்" என்றவனால் இவளுக்கு அவளை நினைத்து வருத்தமானது.

நேற்று உயிர் நண்பன் கோபமாய் கிளம்பவும் அவள் எத்தனை வருந்தினாள் என இவளும் கண்டாளே.

"நாளைல இருந்து உனக்கு இங்க தான் அடிக்கடி வேலை இருக்கும. அதுவும் எனக்கு வேலை இல்லாத நான் சொல்ற ‌டைம்ல எல்லாம்! அப்ப நீ என்ன‌ பண்ணுவ?" அவன் கேளவும் தொண்டை அடைத்தது போல எச்சிலை விழுங்கவே கடினப்பட்டு நின்றாள் முல்லை.

"இங்க வரணும்! நான் சொல்ற வேலையை எல்லாம் செய்யணும்! புரிஞ்சுதா?" கேட்டவன் எக்குத்தப்பாக எல்லாம் எதுவும் கேட்க மாட்டான் என்ற நம்பிக்கையில் தலையசைத்து வைத்தாள் முல்லை.

"தட்ஸ் குட்! யூ கேன் கோ நவ்!" என்றவனால் திரும்பி நடந்தாள் முல்லை.

"பரவாயில்லையே இங்லிஷ் எல்லாம் புரியுது. சரி... இது ஹாஸ்பிடல். இங்க ஆயிரம் பேர் வருவான் போவான். எவன் எவன் எப்படி இருப்பான்னு நான் கவலை பட முடியாது. தப்பு நடந்தா கண்டிக்கலாம் தண்டிக்கலாம். அதுக்கு நீ முதல்ல ஒழுங்கா யூனிஃபார்மை போடு. அதோட டீசன்ட் சாரீயா வியர் பண்ணு. சும்மா ஜிகுஜிகுனு வந்து இடுப்பை வேற காட்டிட்டு..." கடுமையுடன் கடமையாக தொடங்கி இறுதியில் கடுப்பாக முடித்தான் ஆதிஷ்.

முல்லை பதில் பேசாது வெளியேறி விட்டவள் அடுத்த நாள் முதல் அவன் அறையில் தான் அதிகம் இருந்தாள் அவன் வார்த்தைகளிலும், செயலிலும் வதைப்பட்டுக் கொண்டு.

தொடரும்...
 

Author: உங்களில் ஒருத்தி
Article Title: முள் நேசம் - 7
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top