நயனவாசினி - 05

New member
Joined
Aug 20, 2025
Messages
19
காந்த பொழுதாய் மாறியிருந்த அந்த காலை வேளையில் காரணமில்லாத மென்னகை முகிழ்த்து குமரனை வசீகரமாய் மாற்றியிருந்தது.

சொல்ல முடியாத ஒரு சந்தோஷ சாரல் அவனுள் பொழிய, முயன்று அதை முகத்தில் காட்டாது அவன் கட்டுப்படுத்தப் பார்க்க, எங்கு முடிந்தது?

இதழ் கடித்தவன் தன்னை அடக்கப் முயல, அழைத்துவிட்டாள் அவன் நயனப் பைங்கிளி!

அவன் எடுத்தவுடன், “என்னங்க, நல்லா தூங்குனிங்களா?” என்றவள் குரலின் குளிர்ச்சி அவன் செவி நிறைத்து, உள்ளம் தழும்பியது.

மங்களம் பொங்கும் வார்த்தையாய், அவள் ‘என்னங்க’ அவனை மகிழ வைத்து உண்மை.

அவன் அவளிடம் விழுந்த நொடி தொட்டு, அவனிற்கான மரியாதை ஒரு சொட்டு கூட அவள் குறைத்து அழைத்ததே இல்லை. அதிலும், அவளின் ஆசை பொங்கும் ‘ங்க மொழியில் விரும்பித் தொலைவதில் அலாதி ப்ரியம் கொண்டிருந்தான், சந்தனக்குமரன்.

“ம்ம்.. எழுந்துட்டேன் இப்போ” என்றவன் ஏதும் பேசாது அமைதி காத்தான்.

அவள் வார்த்தைகளை உணர்ந்து உள்வாகிக்கொண்டிருந்தான் போல, காரணமற்ற அந்த அமைதியும் மென்புன்னகையும் ஏதோ அவனை பேரழகு பேராண்மைக்காரனாய் காட்டியது.

“சைலண்டா இருக்கீங்க? வலி இன்னும் இருக்கா’ம்மா. உண்மைய சொல்லுங்க” அவள் படபட குரலில் தான் அவன் மீதான அபரிமிதமான கரிசனைக் கொட்டிக்கிடந்ததே.

“ம்ப்ச்.. இல்லடி! என்னமோ ஒரு மாதிரி.. ம்ம்.. நிறைவா இருக்கு நயனி. சரியா சொல்லத் தெரியலை எனக்கு” என்றவன் சரபேஸ்வரன் வந்து சென்றதைப் பற்றி பகிர்ந்தான்.

“அவரே வந்து கேட்டாராங்க”

“ஆமா. நானே எதிர்பார்க்கல”

அவளோ புருச்சுழிப்புடன், “ஆனா நேத்து எனக்கு ஜோதி போனடிச்சு எம்.டி நம்ம மேல ரொம்ப கோபமா இருக்கார். இனி நம்ம வேலைக்கு ஏத்த மாட்டார்னு சொன்னா?” என்க,

“வாய்க்கு வாய் பேச்சு வரும் தான நயனி கண்ணு. நீ கண்டுக்காத. யார் இனி போனடிச்சு பேசினாலும் அளவா பேசு, தேவையில்லாதது வந்தா கட் பண்ணு” என்க, அவளும் அதை ஏற்றுக்கொண்டு பேசினாள்.

“நைனா தான் நைட்டெல்லாம் உங்கள பத்தி பேசி பேசி மாஞ்சு போயிடுச்சு. அம்மாவும் இன்னிக்கு உங்கள சாப்ட கூப்ட சொல்லுன்னாங்க” என்றவள் சமையல் வகைகளை அடுக்க,

“வரலாமே! மாமியார் கையால இத்தன சாப்பாடு சாப்டா உடம்பு கொஞ்சம் சீக்கிரமா தோறும்” என்றவன் பேச்சு இயல்பாய் வருவதை உணர்ந்து கொண்டால்.

“நடக்கும் போது காலுக்கு ரொம்ப அழுத்தம் கொடுக்காதீங்க. என்ன?”

“சரி கண்ணு” என்றான் சிரிப்புடன்.

அங்கு கண்ணை உருட்டியவள், “நக்கல் பண்ணாதீங்க. எனக்கு தான் உங்க கூட இல்லாம பயந்து வருது. வலியில்லையில குமரா” மீண்டுமவள் கேட்க,

“நா நேருல வரேன் தான? அப்போ நீயே பாரு. உடம்பு தான் முறுக்குது, மத்தபடி நேத்தளவுக்கு இல்ல” என்க,

அவள் அதீதமாய் போய், “அப்போ நானு ஆட்டுக்கால் சூப் செய்யறேன். இங்க வந்து ஒருக்கா குளிக்கறீங்களா?” என்க, “அடியேய் நயனி” கத்தியிருந்தான் குமரன்.

பின், “இன்னும் நா உங்க வீட்டு மாப்பிள்ளை ஆகலடீ” அவன் மொழிய,

விசுக்கென்று, “இருந்தாலும், எனக்கு நீங்க எப்போவே ஓனர் ஆகிட்டீங்க” என்றாள் மெல்லமாய்.

“நானெங்க ஆனேன். என்னை மொத்தமா லவட்டிக்கிட்டு எனக்கு நீ தான் ஓனர் ஆகியிருக்க, நயனிக்கண்ணு” என்றான் உல்லாசமாய்.

அந்த பேச்சு கொடுத்த தைரியத்தில், “அது.. நா ஒன்னு சொல்லுவேன். கோவிக்காதீங்க” பீடிகை போட்டே கேட்டாள்.

தரையில் அமர்ந்திருந்தவன் முதுகிற்கு தலையனை வைத்து சாய்ந்தமர்ந்தபடி, “சொல்லு” என்றான் இலகுவாய்.

நிச்சயம் அந்த குரலை உணர்ந்திருந்தவள் அதில் மறுப்பேதும் வராது என்று நம்பிக்கையோடு ஆரம்பித்தாள்.

அவள் சொல்லும் போது சரியாய் குமரனின் இரண்டாம் அழைப்பில் காத்திருந்தார் அவன் அம்மா, மோகனா.

“ஹேய் கண்ணு, உன் மாமியார் அழைக்கறாங்க. சத்தங்காட்டம இரு” என்றவன் இரு இணைப்புகளையும் ஒன்று சேர்த்திருந்தான்.

நிதர்சன வாழ்க்கையில் அது முடியுமா என்பதைப் பொருத்திருந்து பார்க்க விதி வழி செய்ய காத்திருந்தது.

மோகனா, “ஏய்யா, குமரா, சாமி… ஆகாரமெல்லாம் ஆச்சா’ய்யா” என்க, நயனிக்கு தன்னால் ஒரு குறுநகை.

அவள் குமரனை ஆராதிக்கும் மாமியாரை அக்கணத்தில் இன்னுமின்னும் பிடித்தது.

முன்னர் மோகனா அழைத்தபோது சரபேஸ்வரன் வரவும் கார்த்தி அவரின் அழைப்பை சட்டென்று துண்டித்திருந்தான்.

அதில் குமரன் கத்தியது மோகனாவை அரைகுறையாக எட்டியிருக்க, மீண்டும் அவன் வேலைக்கு கிளம்பும் நேரத்தை அறிந்து அழைத்துவிட்டார்.

இணைத்தவுடன் தான் அவன் அவனிற்கான ஏழரையும் வழிந்து தூக்கி மடியில் போட்டது புரிந்த நொடி, சந்தனக்குமரனின் முகம் பரிதாபத்தை காட்டியது.

‘போச்சா’ என்று தலையில் அடித்துக்கொண்டவன் நயனியின் அழைப்பை துண்டிக்க துணியவில்லை.

அங்கு, “குமரா, சாமி” என்று மோகனா மீண்டும் மகனை அழைக்க,

“ஹான், ம்மா” என்றான் விசுக்கென்று.

“என்ன சாமி, ஆகாரம் ஆச்சா? இன்னும் கடைக்கி போவலையா நீயி?” என்க, பதிலில்லாது முழித்தான்.

“ஆச்சு ம்மா. நீயி என்ன? தோட்டத்துல இல்லாம இந்நேரம் கூட்டிருக்க” என்க, மகன்
தான் காலையில் அழைத்ததை மறந்துவிட்டானோ என்று நினைப்பு அவருக்கு.

அதை விடுத்து, “போகனும் ராசா. நீயி வூருக்கு எப்போ வருவ? உன் தோது சொல்லு” என்று அவர் கேட்க, உசாரானான்.

“இப்போ தானே’ம்மா கடை தெறந்திருக்கு‌. இன்னும் மாசமாகும் நா வர” என்க,

இது ஆகாது. இவன் நழுவப் பார்க்கிறான் என்றறிந்தவறாய்,
“சரி, நம்ம பெரியாத்தா வழி சொந்தம். மேக்கால பழனிச்சாமி மச்சான் தோட்டத்துக்கு பக்கம் பத்தேக்கார காடு வெச்சிருக்காங்களே விருமாண்டி, அவுக மக, நிவேதாவுக்கு உன்னிய கேட்டிருக்காங்க குமரா.

ஐயா, எனக்கு, வேலுக்கு எல்லாம் அம்புட்டு பிடிச்சது. நீயி வந்த கையோட பரிசம் போட்டு, வைகாசியில கண்ணாலம் வெச்சிடலாம். எப்போ வர?” என்றவர் மொத்தமாய் சொல்லி முடிக்க, நயனியின் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

எதுவும் பேசமுடியாத மந்த நிலையில் ஆழ்ந்துவிட்டான், குமரன்.

காலையில் கத்தியதைக் கூட இப்போது செய்ய முடியாத ஒருவித அடைந்த நிலை.

‘காதலிச்சா இதையெல்லாம் கடந்து தான் வரனும் குமரா’ அவனுக்குள் சொல்லிக்கொண்டவன் அப்போதைக்கு மோகனாவை சமாளித்து கைப்பேசியை வைத்துவிட்டான்.

இருந்தும், நயன மனோகரியை அவனால் சமாளிக்கவோ சமாதானம் செய்யவோ முடியாது முட்டிக்கொண்டு சண்டையாகி இருந்தது.

எதுவும் முடியாது அவன் அயர்ந்து படுத்த போது, “நானு நாளைக்கு க்ராஸ் கட் கனிமா ஜுவல்லரில வேலை கேட்க போறேன். என் ஃப்ரண்ட் அங்க இருக்க, வர சொன்னா. நா போறேன்” அறிப்பான ஒரு செய்தி.

நயனியிடமிருந்து அவன் இதை எதிர்பார்க்கவில்லை. திரும்ப அழைத்தாலும் புலனத்தில் குறுஞ்செய்தி அனுப்பினாலும் பதிலளிக்காது இருந்தவளை நினைத்து கோபம் கூட வர மறுத்தது.

“நயனிக்கண்ணு, என்னிய கொல்லுறடீ நீ” என்ற குரல் பதிவை மட்டும் அனுப்பியவன் படுத்துவிட்டான்.

காலையில் இருந்த இதம் மொத்தமாய் வழித்து எடுக்கப்பட்ட உணர்வு குமரனிடம்.

அயர்ந்துபோய் நன்றாக உறங்கிவிட்டான். மதியம் ஒரு மணிக்கு மேல் பாண்டி வந்து எழுப்பவும் தான் சிறிது அசைந்துகொடுத்தான்.

“காலேல புடிச்சு சாப்டாம உருண்டுகிட்டு கெடக்கறீயாடா கட்டெறும்பு? மாத்திரயாவது முழுங்குனியாடா” அவன் ஒருபுறம் கத்த, மெல்ல எழுந்தமர்ந்தான் குமரன்.

நல்ல தூக்கம், கண்கள் வேறு லேசாய் எரிந்தது.

‘சூடு வேற பிடுச்சுக்குச்சா’ நினைத்தபடி குளியலறை சென்ற வந்தவனிடம் அடுத்த பிரச்சனையை வாசித்தான் பாண்டி.

“வேலு பதினோரு மணிக்கு கூப்டான்டா. நீ போன எடுக்கலையாம், ஐயா காலேல வண்டி ஏறி இங்க வந்துட்டு இருக்காறாம்” என்றானே, இடுப்பில் கையுன்றி நின்றுவிட்டான் குமரன்.

இதழ் குவித்து காற்றை வெளியிட்டவன் இதயம் தாளம் தப்பித்தான் துடித்தது.

‘காலேல நாம கத்துனத அம்மா கேட்டுடுச்சு’ என்பது மட்டும் புரிந்தது அவனுக்கு.

“சரி, நா பேசிக்கறேன்”

“என்ன பேசுவா நீ? அப்பா உன்ன இப்டி பார்த்தாருனா என்னாக?” என்க, அந்த கவலையெல்லாம் மீறிய ஒன்று அவனை அரித்தது.

“சொல்லிக்கலாம்டா. மொத என்னைய தனியா விடு. காலேல இருந்து நொச்சு நொச்சுன்னு எல்லாரும் சேர்ந்து போட்டு பந்தாடுறீங்க என்னை” அவனிடம் எரிந்த விழுந்தவன் சட்டையை மாட்டிக்கொண்டு வெளியேறிவிட்டான்.

சூடாய் ஒரு டீயை குடித்தவன் சிங்காநல்லூர் பஸ் ஏறிக்கொண்டான்.

அவன் அங்கு சென்று சேரவும், அவன் ஐயா ஆண்டியப்பன் அழைக்கவும் சரியாய் இருந்தது.

“குமரா, காங்கேயம் தாண்டிட்டேன்” என்றார் கணீரென்று.

எச்சிலைக் கூட்டி முழுங்கியவன், “வாங்க’ய்யா. நா வந்து கூட்டிக்கிறேன்” என்றவனிடம் அத்தனை யோசனை.

இன்றே அவனை கையோடு ஊருக்கு அழைத்துச் செல்லத் தான் அவன் ஐயாவை, மோகனா அனுப்பியிருக்கிறார் என்பதில் துளி மாற்றில்லை அவனிடம்.

என்ன ஆனாலும், அவனும் இன்றே தான் காதலை சொல்லிவிட வேண்டும் என்ற வலுவும் அவனிடம் ஏற்பட்டது.

இரண்டு மணிநேரம் கடந்து வந்த தகப்பனை நிர்மலமாய் பார்த்து நின்றிருந்தான் மகன்.

அவன் முகத்தில் இருந்த வீக்கமும் அவன் நடையின் சாயலும் ஆண்டியப்பனை துணுக்கற வைக்க, “ஒரு பைக்காரன் வந்து இடுச்சுட்டான் ஐயா நேத்து. அம்மாவுக்கு தெரிய வேண்டாம்னு தான் நான் சொல்லலை” என்க, ஆதங்கத்துடன் மகனின் தோள் தடவி பத்திரம் கேட்டறிந்தார்.

“நா வந்தனால ஆச்சு. இல்லாட்டி அப்புடியே மறச்சுருப்பேல நீயி” என்றபடி அவனுடன் நடந்தார்.

இடைவேளை விட்டு நடந்தபடி, “வண்டிக்காரன் வந்து இடிச்சு எம்புட்டு ஆகியிருக்குனா ஒ ஒடம்புல அப்புடி என்ன வழுவிருக்கு? இன்னமும் இங்கன கால் வலிக்க நின்னு தான் ஆகனுமா நீயி?” கோபம் ஏற ஆரம்பித்தது அவருக்கு.

நல்ல திடகாத்திரமான உரமேறிய மேனியோன் தான் ஆண்டியப்பன்.
விபரம் தெரிந்த நாள் முதல் காடு, தோட்டம், ஏர் கலப்பை, மண்வெட்டி என்று உழைத்த உடம்பு முறுக்கி நின்றிருந்தது.

அவரை ஒரு நடுத்தர உணவகத்திற்கு அழைத்து சென்றிருந்தான் குமரன். சாப்பிட்ட கையுடன் தான் வந்த கலைப்பு தெரிந்தது ஐயாவுக்கு.

மணி நாலை நெருங்கும் வேளையில், “பக்கத்துல ஏதானும் கோவில் இருந்தா கூட்டி போ குமரா. பேசனும்” என்றார்.

பொதுவாக எந்த ஒரு நல்ல விசமாய் இருந்தாலும் மனைவியை விடுத்து மகன்கள், உறவினர்களிடம் பகிரும் போது அதை கோவிலில் வைத்து சொல்வது ஆண்டியப்பனின் வழக்கம்.

அவர் அப்படி கேட்கவும், உடல் விரைத்துக்கொண்டது குமரனுக்கு.
சொல்ல வேண்டிய நேரம் கூர்ந்துவிட்டது.

கண்மூடிக் கொண்டவன் கைக்குள் ஒரு நொடி அதிர்ந்தது அவன் கைப்பேசி.

பார்க்க, “ஸாரி’ங்க. அத்த சொன்னதும் கோபம் வந்துடுச்சு. வீட்டுக்கு சாப்ட வாங்க, ஃப்ளீஸ்” என்ற நயனியின் குறுஞ்செய்தி அவனை இன்னுமின்னும் இறுக வைத்திருந்தது.

‘வந்தறேன் நயனிக்கண்ணு’ என்று உள்மனதில் சொன்னவன் அவனை பெற்றவரை எதிர்கொள்ள சித்தமானான்.


••••
 

Author: Nayanavaasini
Article Title: நயனவாசினி - 05
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
77
ஏப்பா ஐய்யனாரே... புள்ள பயப்புடது புரிஞ்சு ஒத்துக்கோங்க.. பாவம் நயனி புள்ள... இங்குட்டு குமரன் உடம்பிலும் தெம்பில்ல.. பார்த்து பக்குவமா பண்ணி விடுங்க... ஆனாலும் ரைட்டரு உங்க கிட்ட எந்த நேரத்துல தான் குமரனுக்கு பிரச்சனை வரக்கூடாதுனு சொன்னேனோ அப்போ ஆரம்பிச்சதாக்கும் 😡😡😡
 
New member
Joined
Aug 20, 2025
Messages
19
ஏப்பா ஐய்யனாரே... புள்ள பயப்புடது புரிஞ்சு ஒத்துக்கோங்க.. பாவம் நயனி புள்ள... இங்குட்டு குமரன் உடம்பிலும் தெம்பில்ல.. பார்த்து பக்குவமா பண்ணி விடுங்க... ஆனாலும் ரைட்டரு உங்க கிட்ட எந்த நேரத்துல தான் குமரனுக்கு பிரச்சனை வரக்கூடாதுனு சொன்னேனோ அப்போ ஆரம்பிச்சதாக்கும் 😡😡😡
அவன் எதையும் தாங்கும் இதயம் உடையவன்‌.

வருவான் பழைய பன்னீர் செல்வமா திரும்ப வருவான் ♥️

மிக்க நன்றி சகோ 📿
 
Top