அத்தியாயம் 2

Joined
Aug 19, 2025
Messages
10
அத்தியாயம் 2:

" கடவுளின் நகரம் " என அழைக்கப்படும் இயற்கை எழிலை தன்னகத்தே கொண்டு விளங்கும் கேரளா மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரம் மாவட்டத்தில் வந்திறங்கினான் ஈஸ்வர்....

அதிகாலை நேரம் குளிர்ந்த காற்றும் பச்சை பசேலென விளைந்து நிற்கும் வயல் வெளிகளும் அவன் கண்களுக்கும் உடலுக்கும் ஒரு சிலிர்ப்பை கொடுக்க,

அவ்விடத்தின் அமைதியே அவனை இன்னும் இன்னும் அதனுள் ஈர்க்க, அதில் வியந்து அங்குள்ள ஒவ்வொரு இடத்தையும் கையில் இருக்கும் கேமராவிலும் கண்களிலும் பதிவு செய்து கொண்டே வந்தான் ஈஸ்வர்..

முதல் முறையாய் வந்திருப்பதாலோ என்னவோ அவ்விடம் அவன் மனதிற்கு அமைதியையும் நெருக்கத்தையும் கொடுக்க, அவ்விடத்தின் செழுமையில் சற்று நேரம் அங்கேயே நின்று கொண்டான்..

ஒற்றை காலை மடக்கி கார் கதவின் மேல் சாய்ந்து நின்று கனியனை அழைத்த ஈஸ்வர், " இங்க இருக்க மறைமுகமான, அப்புறம் வெளிப்படையான சுற்றுலா தளங்கள் எல்லாத்தையும் விசாரிச்சிட்டியா??" என கேட்க,

அவனும் ஆமென தலையசைத்து,
" சார்.. நீங்க சொன்னீங்களே பத்மநாப சுவாமி கோவில்.. அதுக்கு பக்கத்தில் தான் இருக்கோம்... லாட்ஜ்க்கு போய் குளிச்சுட்டு கோவிலுக்கு போயிட்டு அப்படியே வெளியே வந்தா கொஞ்ச தூரத்தில் அங்க ஒரு பீச் இருக்கு..." என அவ்விடத்தை பற்றி சொல்லிக் கொண்டே போக,

அவனை ஒரு பார்வையால் தடுத்து நிறுத்தியவன், " ஸ்டாப் இட்.. அதெல்லாம் போகும் போது பார்க்கலாம்... தென் இங்க மலையாளம் தெரிஞ்ச ஒரு டூரிஸ்ட் கைட் ஏற்பாடு பண்ண சொன்னேனே. செஞ்சியா??" என புருவம் உயர்த்தி கடுமையான பார்வையால் அடுத்த கேள்வியை கேட்டான்..

பாவமாக அவனை பார்த்த கனியனோ,
" ஒன்னு முழுசா முடிக்க முன்ன அடுத்த கேள்வியா?? இவர் கூட எப்படி என் வேலையை தொடருவேன் ஈஸ்வரா.. அந்த பார்வைக்கே உடம்பெல்லாம் அல்லு விடுது.." என எண்ணிக் கொண்டே,
" ஹா.. ஹான்.. ஏற்பாடு பண்ணிட்டேன் சார்.. அவர் நேரா கோவிலுக்கு வந்திடுவார்.. அங்க இருந்து.." என ஏதோ சொல்ல வர,

" ஒகே " என ஒற்றை வார்த்தையை உதிர்த்து அவனை பேச விடாமல் தடுத்து நிறுத்தி விட்டு காரில் ஏறி அமர, கார் அவர்கள் தங்க வேண்டிய இடத்தை நோக்கி பயணித்தது...

புலர்ந்தும் புலராத அதிகாலை பொழுதில் குளிர்ந்த நீரில் குளித்து முடித்தவன், வெள்ளை நிற பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து கொண்டு வெளியே வர,

அங்கு அவனுக்கு முன் தயாராகி இருந்த கனியனுக்கு முதல் முறையாய் வேட்டி சட்டை அணிந்து வரும் அவன் கம்பீரமும் அழகும் அவனை மெய் சிலிர்க்க வைத்திட, கண்களை சிமிட்ட மறந்து அவனையே பார்த்து கொண்டு நின்றிருந்தான்...

வெள்ளை சட்டையை மடித்து விட்டு, தலை கோதிக் கொண்டு கீழே வந்தவன் கனியை பார்த்து கோபமாக, " யூ இடியட்.. எப்போ பாரு என்னை ஏதாவது இரிடேட் பண்ணிட்டே இருப்பியா?" என திட்டிக் கொண்டே அவனுக்கு முன் சென்று காருக்குள் ஏறிட,

அவன் கோபத்தை எண்ணி பதறி ஓடிக் கொண்டு வேகமாய் வந்து முன் சீட்டில் அமர்ந்து கொண்டான் கனியாளன்..

அடுத்த சில நிமிடங்களிலேயே அவனின் கார் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலை அடைந்திட,

காரில் இறங்கி உள்ளே செல்லும் முன் அங்குள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, சட்டையை கழட்டி வைத்து விட்டு, வெள்ளை துண்டினை போர்த்திக் கொண்டு உள்ளே சென்றான் ஈஸ்வர்...

பழமை வாய்ந்த ராஜாக்கள் கால அரண்மனை போன்ற வீடு போல நீண்டு இருந்தாலும், தங்க கலசங்கள் ஜொலிக்க, செண்டை மேளம் முழங்க, பெருமாளின் திருப்பள்ளி எழுச்சி இசை முழங்கிக் கொண்டிருக்க,

மூன்று கதவுகளின் வழியே பத்மநாப சுவாமியின் திருவுடலை காணும் தரிசனத்தை சிறப்பு தரிசனத்தில் நின்று கண்டு தரிசித்து கொண்டிருந்தான் ஈஸ்வர்...

அவன் தாயின் பல நாள் ஆசை இந்த கோவிலில் கடவுளை வழிபடுவது.. எனவே பக்தி என்பதை தாண்டி ஏதோ ஓர் உணர்வின் உந்துதலால் வந்தவன் கடமைக்காக கடவுளை பார்த்து விட்டு சுற்றி முற்றி அவ்விடத்தை ஆராய துவங்கினான்...

சிறப்பு தரிசனம் ஆகையால் அங்கு அவனையும் இன்னும் இரண்டு பெண்களையும் தவிர வேறு யாரும் இல்லை... அவள் பின்னே நின்றிருந்த வயதான மூதாட்டி சென்று விட, இருவர் மட்டுமே சந்நிதானத்தில் நின்றிருக்க,

தனக்கு நேர் நின்று கொண்டிருக்கும் பெண்ணை கண்டு ஒரு நொடி அசந்து போனான் ஈஸ்வர்....

எனில் அங்கோ அவன் கற்பனையில் தன் கதையின் நாயகிக்காக சிந்தித்திருந்தது போல் அனைத்து பொருத்தங்களும் பொருந்திய ஒரு கேரளத்து சுந்தரி(அழகி) நின்றிருந்தாள்...

பிரம்மன் மோகத்தின் விளிம்பில் நின்று செதுக்கி இருப்பான் போல அவளை...
வயது இருபத்தி மூன்றை ஒத்திருக்க, பால் நிற தேகத்தில், பெண்மையின் வளங்களை நேர்த்தியாய் கொண்டு, வில்லென வளைந்த புருவத்தின் கீழ் மை தீட்டிய விழிகள், கூரான நாசி, சிவந்து தேன் ஒழுகும் இதழ்கள் போல அவ்வப்போது இதழை ஈரம் செய்து கொண்டு, தங்க நிற ஜரிகை வைத்த வெள்ளை நிற புடவையில் நீல நிற கச்சை அவளை பாந்தமாய் தழுவி இருக்க நின்றிருந்தது பேரழகான பெண் சிலை ஒன்று....

அவன் எதிரே நின்று கண்கள் திறந்து மூடிய படியே இதழ்கள் முணுமுணுக்க, கண்ணீரில் நனைந்த விழிகளோடு கடவுளிடம் எதையோ தீவிரமாக வேண்டி கொண்டிருந்தாள் அம்மாது ...

கொள்ளை கொள்ளும் பேரழகி சிலையென அவன் எதிரே நிற்க, எனில் ஈஸ்வர் கண்கள் நோக்கிக் கொண்டிருந்தது என்னவோ அவளின் அசைந்தாடும் கருவிழிகளை மட்டும் தான்...

வேண்டுதல் முடித்து விழி திறந்தவள், எதிரே இரும்பை விழுங்கிய இறுக்கமான முகத்தோடு கம்பீரமும் ஒரு சேர இறுகி நின்றிருந்த ஈஸ்வரனை பார்த்து ஒரு நொடி கண்கள் படபடக்க அவனை பார்க்க,

அவளின் எதிரே சற்றே நெருக்கத்தில் நின்று இரு கரங்கள் கூப்பிக் கொண்டே புருவம் உயர்த்தி அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஈஸ்வர்...

அதில் தன் அதிர்ச்சியை நொடியில் மாற்றிக் கொண்டவள், அவனை கண்கள் சுருக்கி கோபப்பார்வையில் முறைத்து பார்த்துக் கொண்டே நகரப் போக,

அந்தோ பாவம், கீழே இருந்த தங்க நிற குட்டி படியில் அவள் வெண் சங்கு பாதங்கள் வழுக்கி கீழே விழ போனாள் பெண்ணவள்..

நொடியில் அவளை இடையோடு வளைத்துப் பிடித்து தாங்கியவன் அவளை தன் லேசர் விழிகளால் அணுவணுவாக அளவிட்டு கொண்டிருந்தான் ஈஸ்வர்...

அவள் கைகள் இரண்டும் எதிரே இருந்த ஈஸ்வரின் வெள்ளை துண்டினை இறுக பற்றிக் கொள்ள, அவன் கைகளும் அவள் இடையை வளைத்து பிடித்துக் கொண்டது..

சற்றே பயம் தெளிந்து கண்களை மூடி திறந்தவள், அவனின் கூர்மையான விழிகளையும் தன் நிலையையும் கண்டு நொடியில் சுதாரித்து அவனை விலக்கி தள்ளிட,

ஆடவன் அவன் விழிகளோ அவள் விழிகளை மட்டுமே இன்னும் இன்னும் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தது..

அவள் தீண்டலில் அவள் கை விரல் நகங்கள் ஊடுருவி அவன் தேகம் சிலிர்த்திட, விழிகளின் தாக்கம் அவன் இதயம் வரை ஊடுருவியதை கண்டு தலையை உலுக்கி தன்னை சமன் செய்து கொண்ட ஈஸ்வர்...

இடையை அழுத்திக் கொண்டு, விழிகளால் அவளை ஆராய்ந்து கொண்டிருந்தவன் பார்வையை தவறாய் எண்ணிக் கொண்டவள்,

அதுவரை அவள் இடையை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தவன் கைகளை வேகமாய் தட்டி விட்டு, நொடியில் தன்னை சமன் செய்து கொண்டு எழுந்து, விழிகள் சிவக்க அவனை எரிக்கும் பார்வையில் கோபத்தை கொட்டிக் கொண்டிருந்தாள்....

எனில் அவனோ அந்த விழிகளை தான் விழி சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்..

அவனை முறைத்து தள்ளி விட்டு விலகி சென்றவளை,

" ஹே கேர்ள்..." என அழைத்து, அவள் உணர்வுகளை பற்றி சிந்திக்காமல், அவளை பற்றிய விவரங்கள் அறிய அவள் கைபிடித்து நிறுத்தினான் ஈஸ்வர்...

அதில் கருவிழிகள் உருள அவனை தீவிரமாய் முறைத்தவள், அவன் கைகளை வேகமாய் தட்டி விட்டு, " ஆராண டா தெண்டி நீ.. போய்க்கோ டா.. திரிச்சி நின்னை ஈ ஸ்தலத்தில் கண்டெங்கில் ஞான் நின்னை சவட்டி களையும்.." என விரல் நீட்டி மிரட்டி தன் செப்பு இதழ்கள் படபடக்க திட்டிக் கொண்டே, அவனை தள்ளி விட்டு சென்றாள் அவள்.. அவன் தேடும் நாயகி ரிதி சம்ருதா..."

தன்னை திட்டியதன் அர்த்தம் புரியவில்லை என்றாலும் அவள் தன்னை திட்டுகிறாள் என்பதை அவள் விழியிலும் குரலிலும் கண்டு கொண்டவன், " சோ சேட் பொண்ணே.. உன் கெட்ட நேரமோ, என் நல்ல நேரமோ ரொம்ப சீக்கிரத்தில் என் கண்ணில் சிக்கிட்ட.. இனி நீயே நினைச்சாலும் என் பார்வையில் இருந்து தப்ப முடியாது.. நீ தான் என் படத்துக்கான சரியான கதாநாயகி.. நான் முடிவு பண்ணிட்டேன்..." என மனதில் எண்ணிக் கொண்டே இதழ் வளைத்து ஓர் அர்த்தப் புன்னகை சிந்தியவன் அவளை பின்தொடர்ந்தான்..

அவளோ அவனை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே, கைகளை கூப்பி கடவுளிடம் ஏதோ வேண்டிக் கொண்டே ஓட்டமும் நடையுமாக கோவிலை வலம் வந்து கொண்டிருக்க,

அவள் பின்னே சற்றும் மாறா பார்வையோடு அவளை பின்தொடர்ந்தான் ஈஸ்வர்...

மூன்று முறை வலம் வந்தவள் நொடியில் ஓர் இடத்தில் நுழைந்து அவனறியாமல் வெளியேறிட,

" ஓ ஷிட்.. இவ எங்க?? இந்த நேரத்தில் எங்க போய் தொலைஞ்சான் இந்த கனி??" என மறைந்த அவளை எண்ணி கோபத்தில் காலை உதைத்துக் கொண்டு வெளியே சென்றான் ஈஸ்வர்...

வெளியே காரில் சாய்ந்து கோபத்தில் கார் ஸ்டியரிங்கை குத்திக் கொண்டிருந்த ஈஸ்வர், " முத்திம்மே. வெரூ.. கழிக்காம்.." எனும் அவளின் கந்தர்வ குரலில் அவள் தான் என உறுதியாய் எண்ணி திரும்பி பார்க்க,

அவன் எதிர்பார்ப்பை பொய்க்காமல் அங்கிருந்த பூக்கடையில் அமர்ந்து பூவை தொடுத்துக் கொண்டே ஓர் வயதான பாட்டியை அழைத்துக் கொண்டிருந்தாள் ரிதி...

" ஜஸ்ட்.. ஜஸ்ட் அமேசிங்.. ஐ ஆம் சோ லக்கி.. இவ கிடைக்சுட்டா.." என எண்ணிக் கொண்டே திரும்பிட,

அந்நேரம் மலையாளம் தெரிந்த ஓர் இளைஞன் ஒருவனை அழைத்துக் கொண்டு வந்தான் கனியாளன்....

அவனை முறைத்த ஈஸ்வர், " இவ்வளவு நேரம் எங்க போய் தொலைஞ்ச இடியட் நீ??அங்க பாரு அங்க பூக்கடையில் ஒரு பொண்ணு இருக்கா இல்ல, அவளை பத்தின டீடெயில்ஸ் இன்னும் அரைமணி நேரத்தில் எனக்கு வரணும்.. இல்ல நடக்கிறதே வேற.." என திட்டிக் கொண்டே எதிரே அவள் செயல்களையே பார்த்துக் கொண்டிருக்க,

அவன் கோபத்தில் பயந்த கனி, " சார்.. இதோ இப்போ போய் கேட்டு சொல்லுறேன்..." என அவளை நோக்கி சென்றான்...

அங்கோ ரிதி பூக்களை தனக்கான அளவுக்கு மட்டும் தொடுத்து முடித்து அதை தன் கூந்தலில் சூட்டிக் கொண்டு, இடை வரை இருக்கும் கூந்தலை ஆட்டி ஆட்டி பாட்டியிடம் ஏதோ கேட்டு சிரித்து சிணுங்கி விளையாடிக் கொண்டிருந்தாள்..

ஈஸ்வர் கண்கள் அவளின் மழலை செயலை கண்டு ஒரு கணம் உறைந்து நிற்க, மனமோ, " இத்தனை குழந்தைத்தனம் கொண்ட இந்த பெண்ணையா உன் படத்தில் அதும் வீரமான பொண்ணா நடிக்க வைக்க போற??" என கேள்வி கேட்டு அவன் மனசாட்சியே அவனை கேலி செய்து அவனை சிந்திக்க வைத்துக் கொண்டிருந்தது...

" ரிதியின் குழந்தைத்தனத்தையும் அவளின் கடந்த காலத்தையும் கேட்டு அறிந்த பின் அவளை விட்டு விடுவானா ஈஸ்வர்??

ஈஸ்வரை முதல் பார்வையிலேயே தவறாய் எண்ணிக் கொண்ட ரிதி அவனோடு இணைவாளா???
 

Author: நீல தூரிகை
Article Title: அத்தியாயம் 2
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top