அத்தியாயம் 1

Joined
Aug 19, 2025
Messages
10
அத்தியாயம் 1:

" ஈஸ்வர்.... எனும் கத்தல் அவ்விடத்தை நிறைக்க, " நீ எனக்கு வேணும் ஈஸ்வர்.. நீ முழுசா எனக்கு கிடைக்கும் வரை உன் படம் எதையும் வெளியவே வர விட மாட்டேன்... இப்போவும் சொல்லுறேன் லிவிங் டூ கேதார் லைஃப் ஸ்டைல் மட்டும் நமக்கு போதும்.. எந்த நேரமும் நினைச்ச மாதிரி எல்லாம் சந்தோஷமா இருக்கலாம்... அப்புறம் நமக்கு பிடிச்ச வாழ்க்கையை பார்த்துட்டு போயிடலாம்... ஆனா கல்யாணம்??... ச்ச ச்ச அதெல்லாம் என் மாடர்ன் லைஃப் ஸ்டைலுக்கு செட் ஆகாது.. உன் ஹாட்டான மேனரிசம் எனக்குள்ள எவ்வளவு டெம்ப்டிங் கொடுக்குது தெரியுமா?? அட்லீஸ்ட் ஒன் நைட் ஸ்டான்ட் கூட ஓகே தான்.... இந்த கல்யாணம், குழந்தை, புருஷன் இப்படி ஒரு சின்ன உலகத்துக்குள்ள வாழ எனக்கு விருப்பம் இல்ல.. அண்ட் உன்னோட இந்த மிடில் கிளாஸ் மெண்டாலிட்டி எனக்கு பிடிக்கல ஈஸ்வர்... " என அவன் சட்டையை பிடித்து கொண்டு கண்களில் மோகமும் கோபமும் போட்டி போட்டுக் கொண்டு வழிய கத்திக் கொண்டிருந்தாள் அவள்....

" ஷட் அப் லிகிதா.. " என கர்ஜனையாய் கத்தி முழங்கியவன் அவள் கைகளை தட்டி விட்டு, " ச்ச உன் முகத்தை பார்க்கவே அருவருப்பா இருக்கு... போயும் போயும் உன்னை போய் இவ்வளவு ஆழமா நேசிச்சேன் நினைச்சா என்னை நினைச்சு எனக்கே அசிங்கமா இருக்கு டி...

கேவலம் உன் இச்சைக்காக என் வாழ்க்கை, என் கனவு, உயிரை கொடுத்து உடலை வருத்தி உழைச்ச என் மொத்த டீமோடா உழைப்பையும் இப்படி வரிசையா சிதைச்சுட்டு வரியே.. நீயெல்லாம் ஒரு பொண்ணா?? கொஞ்சமாவது உனக்கு மனசாட்சி இருக்கா??? " என அவ்விடமே அதிர, கோபத்தில் சிவந்த கண்களோடு அவள் கழுத்தை நெறித்து கர்ஜித்து கத்திக் கொண்டிருந்தவனை ஏளன புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தாள் லிகிதா... லிகிதா தன்ராஜ்....

பிரபல முன்னணி நடிகை... பிரபல இயக்குநர் தன்ராஜ் மோகனின் ஒற்றை தவப்புதல்வி....

அவள் பார்வையில் வழிந்தோடிய குரூரமும் மோகமும் அவனை இன்னும் அதீத வன்மத்திற்கு தள்ள,

அவள் கழுத்தை நெறித்து குரல் வலையை அழுத்தியவன், " என்ன டி.. உன் பணக்கார திமிரை என் கிட்ட காட்ட பாக்குறியா??? உன்னை கொல்ல ஒரு நிமிஷம் ஆகாது... ஆனா செய்ய மாட்டேன்.. உன்னை நான் ஜெயிப்பேன். நிச்சயம் ஜெயிச்சு காட்டுவேன்.... உன் முன்னாடி என் வாழ்க்கையிலும் என் தொழிலிலும் ஜெயிச்சு உன் முகத்தில் கரிய பூசுவேன் டி.. அது தான் நான் உனக்கு கொடுக்கிற சரியான பதிலடி..." என அவளை கழுத்தை பிடித்து இழுத்துக் கொண்டு வந்து வெளியே தள்ளி விட்டு நின்றான் ஈஸ்வர்.. ஈஸ்வர் எனும் வீரேஷ் ருத்ரேஸ்வர்...

வெளியே நின்று அவனை பார்வையால் எரித்துக் கொண்டு நின்ற லிகிதா,
" இதுக்கும் சேர்த்து நீ அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கு ஈஸ்வர்.." என விரல் நீட்டி அவனை எச்சரித்து விட்டு நிற்க,

அவனோ கோபத்தில் முகத்தில் அறைந்தாற்போல் கதவை அறைந்து சாற்றி விட்டு உள்ளே சென்றான்..

ஈஸ்வர் வளர்ந்து வரும் இளம் டைரக்டர்... பெயருக்கு ஏற்றார் போல சிவனை போல கோபத்தில் நெற்றிக்கண்ணை திறப்பவன்.. கர்வம் என்ற ஒன்றை கண்களில் வைத்து சுற்றிக் கொண்டு, கண் அசைவில் அங்குள்ள அனைவரையும் ஆட்டிப்படைத்து சரியாய் அனைவரையும் வேலை வாங்குபவன்..

தொழிலில் நேர்த்தியும், திறமையும் கொண்ட அயராத அவனின் உழைப்பும் சேர்ந்தே அவனின் முதல் படத்தில் இருந்தே அவனுக்கு வெற்றியை ஈட்டி கொடுத்தது...

யாரின் ஆதரவும் இன்றி படிப்படியாய் பல அவமானங்களை கண்டு முன்னேறி இருந்த இளம் இயக்குனர்... அவன் படத்தில் நடிக்கும் நடிகை, நடிகர் என அனைவரும் அவன் முகம் பார்த்து, அவனின் பாவனைகளை கற்றுக் கொண்டு அவன் கோபத்திற்கு பயந்தே இரண்டொரு முறையில் சரியாய் அதை நடித்து கொடுத்து விட்டு செல்வர்..

வயது முப்பதை தொட்டிருக்க, அவனின் மாநிற திடமான படிக்கட்டு தேகமும், கருமை மாறா அலையலையான படிந்த கேசமும், கூர்மையான நாசியும், அடர்ந்த புருவமும், தடித்து சிவந்திருக்கும் இதழும், அரும்பி முறுக்கி வளர்ந்து நிற்கும் மீசையும், குட்டி தாடியும் அவனை பேரழகனாய் காட்ட,

கண்களில் எப்போதும் ஒரு வித கடுமையுடனேயே காட்டில் நடக்கும் அரிமா போல் கம்பீரமாய் நடக்கும் அவனின் நடையுமே பல பெண்களை ஈர்த்து விடும்..

எனில் ஈஸ்வரன் கண்களோ எப்போதும் பெண்களை கண்டு மயங்கியது இல்லை.. அவன் மயங்கவில்லையா?? அவனை மயக்கும் விழியை இதுவரை காணவில்லையா என்பது அவனின் சிவனுக்கே வெளிச்சம்...

ஈஸ்வர் தீவிர சிவ பக்தன்.. அனுதினமும் தான் துவங்கும் செயல்களில் சிவனை நம்பி அவன் வழியிலேயே பயணிக்கும் ரகம்.. பத்து வயதிலேயே தாய் தந்தையை இழந்து, வறுமையின் பிடியில் சிக்கி, அன்பெனும் ஒன்றை கனவில் கூட கண்டிராமல் வளர்ந்த கரடு முரடான காட்டு மரம்..

பல அவமானங்களையும் அடிகளையும் கண்டு வாழ்வில் வெற்றி எனும் கனியை எட்டி பிடிக்கவே அவனுக்கு வயது இருபத்தி எட்டை தொட்டு விட, இன்றும் அவன் சுபாவத்தில் என்னவோ மாற்றம் இல்லை... அதே கோபம், தன் வேலை, தன் கடமை என்பதில் மட்டுமே தான்.. தான் மட்டுமே எனும் எண்ணத்தில் மூழ்கி கிடப்பவன்...

இதுவரை ஈஸ்வர் இயக்கிய நான்கு படங்களுமே நன்றாக வெற்றி பெற்று கோடி கோடியாய் தயாரிப்பாளர்களுக்கு லாபம் ஈட்டி கொடுத்தது..

தன் லட்சியத்தில் முன்னேறிய பின் அவனை நம்பி கொடுத்த சிலபடங்களில் நடிக்க அவன் தேர்வு செய்த, என்பதை தாண்டி தேர்வு செய்ய வைக்கப்பட்ட நடிகை தான் லிகிதா...

அவளும் கர்வம் நிறைந்த பேச்சும், அல்ட்ரா மாடர்ன் ஆடையும் அவனை எரிச்சலூட்டும்.. எனவே அவளை துளியும் பிடிக்காமல் ஒதுங்கி சென்றவனை,

சில பல தந்திரமான வேலைகள் செய்து அவனின் பலவீனம் தூய்மையான அன்பு என்பதை அறிந்து,

திறமையை அவனுக்கு அன்பினை கொடுத்து.. அல்ல.. கொடுப்பதுபோல நடித்து,அவனை ஈர்க்க துவங்கி இருந்தாள் லிகிதா...

அவன் எதிர்பார்த்த தாயன்பை, பல நேரங்களில் செயற்கையாய் காட்டி அவனின் ஆழமான காதலை தன் வசப்படுத்தி இருந்தாள்... அவளின் அன்பும், வயதை ஈர்க்கும் அவளின் பேச்சு, என ஒவ்வொன்றிலும் தன்னை மறந்து ஒரு முறை ஒரே ஒரு முறை காதல் எனும் அவளின் மாய வலையில் இடறி விழுந்து விட்டான் ஈஸ்வர்...

யானைக்கும் அடி சறுக்கும் என்பதை போல முதல் முறையாய் தன் தேர்வில் தவறி விழுந்தான் ஈஸ்வர்... அத்தனை பேரையும் அதிகாரத்தால் கட்டி ஆள்பவன், லிகிதாவின் அன்புக்கு கட்டுப்பட்டு இருக்க,

அவளோ அவனின் திடமான தேகத்தில் மோகத்தை வளர்த்துக் கொண்டு அவனை நெருங்கிட,

அவனோ திருமணம் முடியும் வரை அவளின் தேவைகளுக்கு இசைந்து கொடுக்காமல், கழுவும் நீரில் நழுவும் மீன் போல அவளை கெஞ்சி கொஞ்சி மெது மெதுவாய் விலக்கி விடுவான்...

எத்தனை பெரிய வீரனின் மனதிலும் உண்மையான காதல் எனும் உணர்வு புகுந்து விட்டாள் தன் இணையை மொத்தமாய் நம்பி விடுவார்கள் அல்லவா?? அப்படி ஈஸ்வர் வீழ்ந்த இடம் தான் லிகிதாவின் காதல் எனும் துரோகம்...

ஒருமுறை சண்டையில் அவனோடு சேர்ந்து வாழும் தன் இச்சையை லிகிதா கூறிட,

அவனோ திருமணம் எனும் பந்தத்தில் புகுந்து தன் வாழ்வின் அர்த்தமாய் குடும்பம் குழந்தை என மகிழ்வான ஓர் வாழ்க்கையை அடைய எண்ணி அவளின் இச்சைக்கு இணங்க மறுத்து, அவளை நிராகரித்து விட்டு தன் வேலையை தொடர்ந்தான்...


தன்னை அவன் நிராகரித்த கோபத்தில் தன் தந்தையின் அந்தஸ்தை பயன் படுத்தி அடுத்தடுத்து அவன் எடுத்த அத்தனை படங்களின் சில சில வீடியோக்களை திருட்டுத்தனமாக வெளியிடுவது, அவனின் திரைப்படங்களுக்கு பலரை தூண்டி விட்டு எதிர்ப்பு தெரிவித்து படத்தை முடக்கி விடுவது என அவனை வளர விடாமல் தடுத்துக் கொண்டே இருந்தாள்....

அனைத்தும் கண் முன் நிஜமாய் நிழலாட, நள்ளிரவு நேரம் மொட்டை மாடியில் வெற்று தரையில் படுத்திருந்த ஈஸ்வர் விழிகள் அவளை எண்ணி கோபத்தில் சிவந்து கலங்கி நிற்க,

குப்புறப்படுத்து தன் கைகளை எடுத்து அந்த சுவற்றில் அவன் வரைந்து வைத்திருந்த அவள் விழிகளின் மீது ஓங்கி குத்தினான்...

விரலில் வழிந்தோடும் ரத்தத்தில் அருகே இருந்த துணியால் துடைத்து விட்டு,
" கவுண்ட் மை டேஸ் லிகிதா... இதோ என் படத்தோட மொத்த கதையும் ரெடி பண்ணிட்டேன்... கூடிய சீக்கிரம் என் படத்திற்கான நடிகையை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்க வச்சு, உன்னை எந்த விதத்திலும் என் படத்தை தொட விடாம, உன்னை மொத்தமா ஜெயிச்சு காட்ட போற நாள் வந்திடுச்சு...." என கோபமாய் கூறியவன் அங்கிருந்து வெளியே சென்றான்...

கீழே நின்றிருந்த அவன் உதவியாளர் கனியாளன், " சார்.. உங்க கையில் ரத்..." என பதறி அவனை நெருங்க,

அங்கிருந்த மாட்டப்பட்டிருந்த தன் புகைப்படத்தை இடது கையால் இழுத்து கீழே எறிந்து உடைத்தவன், " ஷட் அப்.. இந்த பாசம், விசுவாசம் ம*** ன்னு யாரும் என்னை நெருங்க வேண்டாம்.. என்ன பார்த்துக்க எனக்கு தெரியும்... நான் சொன்னதுபோல திருவனந்தபுரம் போக ஏற்பாடு பண்ணிட்டியா?? லொகேஷன் பார்க்க போகணும்..." என கத்த

அதில் பயந்த கனி, " ஏ.. எஸ் சார்..நா.. நாளைக்கு ஈவினிங் ஃப்ளைட்.. நெக்ஸ்ட் மார்னிங் அங்க போயிடலாம்..." என திக்கி திணறி கூறினான்...

அவன் கண்களில் பயத்தை கண்டு
" ம்ம் " எனும் ஒற்றை முனகலில் முடித்துக் கொண்டு உள்ளே சென்றவன், தன் படத்திற்காக தேடும் நாயகியின் சிறப்பு அம்சமாக வரைந்த அந்த கண்களை பார்த்துக் கொண்டிருந்தான்.. அதுவும் மகிழ்ச்சி, கோபம், அழுகை, வலி, என அனைத்து உணர்வுகளையும் பிரதிபலிக்கும் விதவிதமான உணர்ச்சிகள் கொண்ட வரைபடம் அது....

அதை வருடிக் கொடுத்தவன், " நீ எங்க தான் இருக்கியோ பொண்ணே... நீ எங்க இருந்தாலும் சரி நிச்சயம் உன்னை கண்டு பிடிப்பேன்.. நீ எப்படி இருந்தாலும் சரி உனக்கு நடிப்பை சொல்லி கொடுத்து உன் திறமையை வளர்த்து நடிக்க வச்சு, ஜெயிச்சு என் திறமையை நிரூபிப்பேன்... அதுக்காக என்ன வேணாலும் செய்வேன்...." என கோபத்தில் கத்தியவன் கண்களை மூடி, பல விஷயங்களை சிந்தித்துக் கொண்டு அதிகாலையே உறங்கி போனான்...

தோல்வி, துரோகம் என அனைத்திலும் வலியோடு கூடிய ஆறாத வடுவோடு உடைந்து போனாலும் மது, மாது, சூது, என எதிலும் தன்னை ஈடுபடுத்தி கொள்ளாமல், அவளை பிரிந்ததில் இருந்து இன்று வரை தன் கவனத்தை ஜெயிப்பதிலேயே பதித்து, படத்திற்கான கதை, வசனம் என அனைத்தையும் எழுதிக் கொண்டு தன் வலியை ஓரம் கட்டி விட்டு, தன் வெற்றியை நிலைநாட்டுவதில் மட்டுமே தீவிரமானான்....

அவன் தேடிடும் அந்த கண்கள் கொண்ட பெண்ணோ கேரளாவின் சிறிய கிராமத்தில் ஓர் சிறிய ஆசிரமம் ஒன்றில், அனைவருக்குமே அன்பை வாரி வழங்கி, தனக்கென சில கனவுகளோடு சுதந்திரமான பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிந்து கொண்டிருந்தாள் அவள் ரிதி சம்ருதா.....


ருத்ரம் மிகுந்த ஈஸ்வர் கைகளில் அன்பை மட்டுமே கொடுத்து வாழும் ரிதி கிடைத்தால் அவளின் நிலை என்ன???

ருத்ரமும் அன்பும் அதீதமாய் கொண்ட எதிரெதிர் தன்மை கொண்ட மேகங்களின் சதிராட்டத்தை இனி காண்போம்!!!...
 

Author: நீல தூரிகை
Article Title: அத்தியாயம் 1
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
77
ஈஸ்வர் கோவம் நியாயமானது தானே! எப்படி தான் தேவைக்காக ஒருத்தரை ஏமாற்ற முடியுதோ?? லிகிதா ஒழுங்கா அவனை காதலிச்சு உண்மையா இருந்திருந்தா தாங்க தட்டுல தாங்கிருப்பான். இப்போ அவளோட திமிரால அவளோட சினிமா வாழ்க்கையும் போக போறது ரொம்பவே உறுதி :LOL: :LOL:
 
Top