கவிதை 6

Joined
Aug 20, 2025
Messages
10
கவிதை 6
காலைக் கதிரவன் கண் விழிக்கும் முன்னே அரக்க பறக்க வேலைத் தேடி அலையும் ஸ்ரீ இன்று மணி பத்து ஆகியும் படுத்த இடத்தை விட்டு எழும்பவில்லை. விடியற்காலை நாலு மணிக்கே அலாரம் வைத்து அவளை எழுப்பி விடும் ராகவனும் இன்று அவளை தொந்தரவு செய்யவில்லை.

ஆழ்ந்த நித்திரையில் இருந்தவளிற்கு சுள்ளென்று அடிவயிற்றில் வலி தோன்ற... வயிற்றைப் பிடித்துக் கொண்டே எழுந்து அமர்ந்தாள்.

'இது வேறயா?' என்றவள் சலித்துக் கொண்டே எழுந்து குளியலறை புகுந்துக் கொண்டாள்.

குளிக்க ஹீட்டரை ஆன் செய்த பின்பு தான் முக்கியமான ஒன்றை மறந்து விட்டோமே என்றவள் யோசனையோடு வெளியே வந்து தனது கைப் பையில் இருந்த சில நூறு ரூபாய் தாள்களை எடுத்துப் பார்த்தாள்.

இந்த ஒரு வாரமும் அவளது செலவுகளை பார்த்தீபன் தான் பார்த்துக் கொண்டான். அவள் மறுத்தும் அவன் கேட்கவில்லை. ஆனால் செலவுக்கு வைத்துக் கொள் என்று அடாவடியாக அவள் பையில் திணித்தது நினைவு வந்தது.

முதல் மாசம் சம்பளம் வந்ததும் பார்த்தீ ப்ரோக்கு கொடுத்திடனும் என்றவள் நினைத்துக் கொண்டே கடைக்கு செல்வதற்காக வெளியே வர...

"எங்க போற?" என்றபடி அவளை வழி மறித்து நின்றான் ராகவ்.

"கடைக்கு" என்றாள் அவளுக்கே கேட்கா குரலில்.

"இப்படியே இந்த ட்ரெஸோடவா?" என்றவன் அவளை மேலிருந்து கீழாகப் ஒரு மாதிரி பார்க்க.

"இந்த ட்ரெஸ்க்கு என்ன?" என்றவள் அப்பொழுது தான் தன் ஆடையில் படிந்திருந்த கறைகளைப் பார்த்தாள்.

அவளுக்கு ஒரு மாதிரி அசௌகர்யாகி விட்டது.

"அது" என்றவள் அந்த கறைகளை அவன் கண்ணில் படாதபடி தனது கை பையை வைத்து மறைக்க...

இதழ் குவித்து ஊதியவன் "உன் ரூம்ல ரைட் சைட் கபோர்ட்ல உனக்கு தேவையானது இருக்கு" என்றவன் அவளை மேலும் சங்கடப்படுத்த விரும்பாது தனது அறைக்குள் சென்று கதவடைத்துக் கொள்ள அப்பொழுது தான் அவளுக்கு மூச்சே வந்தது.

அதன் பிறகு குளித்து முடித்து வந்தவள் அறைக்குள்ளே படுத்துக் கொண்டாள். அவனும் அவளை தொந்தரவு செய்யவில்லை.

கொஞ்ச நேரம் கழித்து அவளது அறைக் கதவு தட்டப்பட வந்தது என்னவோ அங்கே வேலை செய்யும் பணிப்பெண் தான்.

அவளோ முதலில் அவரை புருவம் சுருக்கிப் பார்த்தவள் "யார் நீங்க? என்ன வேணும்?" என்று கேட்க.

"நான் இங்க தான்மா வேலை செய்யுறேன் பேரு லட்சுமி. காலையில இருந்து நீங்க எதுவும் சாப்பிடலைனு ராகவ் தம்பி தான் உங்களுக்கு இதை குடுத்துட்டு வர சொல்லிச்சு" என்றவர் அவள் கையில் சாப்பாடும் டார்க் சாக்லேட்டும் கொடுத்தவர் சற்று நேரத்தில் மீண்டும் வந்து "வலி இருந்தா இதை வச்சிப்பீங்களாம்" என்றவர் ஹாட் பேக்கைக் கொடுத்து விட்டு சென்றார்.

அதேப் போல மதியமும் கொஞ்சம் சாப்பாடும் சாக்லேட்டும் கொடுத்தவர் மாலை நேரம் போல ஐஸ்கீரிமும் கொண்டு வந்து கொடுத்தார்.

'இந்த எலி எதுக்கு இப்படி பாக்ஸரோட ஓடுதுனு தெரியலையே' என்றவள் முனுமுனுத்துக் கொண்டாள்.

அன்று முழுவதும் அவள் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. இரவு சாப்பாட்டையும் அவளுக்கு கொடுத்த அந்த பணிப்பெண் "இப்போ பரவாயில்லையாம்மா... நைட் எதுவும் வலி வந்தா இதுல வலி மாத்திரை இருக்கு போடுவியாம். எதுவும் வேணும்னா தம்பிக்கிட்ட கேளும்மா" என்றவர் சொல்ல.

இப்பொழுது தான் அவளுக்கு வலி கொஞ்சம் குறைந்து நார்மலாக இருந்தாள். "ஆமா நான் ஒரு வாரமா இங்கே இருக்கேன் இன்னைக்கு தான் உங்களைப் பார்க்குறேன்" என்றவள் கேட்க...

"நான் தினமும் தான் வரேன்... தம்பி வீட்ல இருக்கும் போது வீட்ல யாரும் இருக்க கூடாது. தம்பி வெளிய போனதும் வாட்ச்மேன் போன் பண்ணி சொல்லுவாரு... அதுக்கு அப்புறம் வந்து வீடெல்லாம் சுத்தம் பண்ணிட்டு தம்பி வீடு வரதுக்குள்ள கிளம்பிடுவேன். அதுனால நீங்க பார்த்திருக்க வாய்ப்பே இல்லை" என்றவர் "இன்னைக்கு என்னனு தெரியலை... தம்பி காலையிலையே போன் பண்ணி நேரமே வந்து சாப்பாடு எல்லாம் செய்ய சொல்லிச்சு... சரிம்மா எனக்கு நேரமாகிடுச்சி நான் கிளம்புறேன்" என்றவர் அங்கிருந்து கிளம்பினார்.

அவளும் ஒரு பெருமூச்சுடன் கதவடைத்து விட்டு விட்டத்தைப் பார்த்த படி படுத்துக் கொண்டாள்.

அன்று மட்டுமல்ல அந்த ஒரு வாரமும் அவளிற்கு அப்படி தான் போனது. ராகவும் வீட்டில் தான் இருந்தான் ஆனால் அவளை எந்த தொந்தரவும் செய்யவில்லை. லட்சுமியும் தினமும் அவளுக்கு பேச்சு துணைக்கு உடன் இருந்தார்.

பார்த்தீபன் அடிக்கடி அவளுக்கு அழைத்து விசாரித்துக் கொண்டான். அவன் இன்னுமே வேலையும் வீடும் தேடிக் கொண்டு தான் இருக்கிறான். அவன் நண்பனின் அறை உரிமையாளரும் ஒருவருக்கு மேல் தங்கக் கூடாது. சீக்கிரமே வேறு இடம் பார்த்து விட்டு சென்று விட சொல்லி விட்டார். இனி அவனாலும் அங்கு அதிக நாட்கள் தங்க இயலாது.

ராகவ், ஸ்ரீயுடன் போட்ட அக்ரிமென்ட் முடிந்து ஒரு வாரம் ஆகிப் போனது. இன்று ஸ்ரீ நேரமே குளித்துக் கிளம்பியவள் அவனைத் தேடித் தான் வந்தாள்.

அவனும் அவளிற்காக தான் காத்திருந்தான் போலும் "சொல்லு" என்றவன் அவள் முகம் பார்க்க.

"நீ ஜெயிச்சிட்ட ராகவ். நீ போட்ட எந்த கண்டிஷனையும் என்னால முடிக்க முடியலை... வேலையும் இல்லை. தங்க இடமும் இல்லை. இந்த வீட்டை விட்டு நானே நினைச்சாலும் போக நாதி இல்லை. இது தானே ராகவ் உனக்கு வேணும். எனி வே நான் இங்க சும்மா தங்கலை... இதை நான் வொர்க் பண்ற கம்பெனில எனக்கு கொடுத்த ப்ரீ அக்கமடேஷனா எடுத்துக்குறேன். ஆமா எனக்கு சம்பளம் எவ்வளவுனு இன்னும் சொல்லவே இல்லையே?" என்றவள் அவன் முகம் பார்க்க...

அவள் பேச்சில் புருவம் உயர்த்தியவன் அவளது கடைசிக் கேள்வியில் கேலியாக உதட்டை வளைத்த படி.... "என்ன மேடம் அக்ரிமென்ட் ஒழுங்க படிக்கவே இல்லையா?" என்றான் அவன் சிரித்த படி.

"அப்படி என்ன இருக்கு?" என்றாள் அவள் அவனை புரியாது பார்த்த படி.

"வெயிட்" என்றவன் மீண்டும் அந்த பத்திரங்களை எடுத்து வந்து அவளிடம் கொடுத்து படிக்க சொல்ல...

அதை வாசித்தவள் அப்பொழுதும் அவனை புரியாது பார்க்க...

"சரி தான்... வெறும் பேச்சு மட்டும் தான் போல... மண்டையில ஒன்னும் இல்லை" என்றவன் "ஒரு அக்ரிமென்ட்ல சைன் பண்ண முதல் அதுல என்ன இருக்குனு தெளிவா புரிஞ்சிக்காம லீகல் கன்சல்டன் இல்லாம சைன் பண்ண கூடாதுனு தெரியாதா?" என்றான் அவன்.

அவள் மீண்டும் மீண்டும் அந்த பத்திரங்களை வாசித்தவள் அப்பொழுது தான் ஒன்றை கவனித்தாள். அவளது புருவங்கள் அதிர்ச்சியில் விரிந்து கொள்ள...

"ஹாஹா பைனலி கண்டுபிடிச்சிட்ட போல... ஆயுள் முழுவதும் என்கிட்ட நீ வேலை செய்யனும்னு தான் போட்டுருக்கு... அதுக்கு நான் சம்பளம்னு ஒன்னு தருவேன்னு போடவே இல்லையே..." என்றவன் ஒற்றைக் கண் சிமிட்ட...

"பட் இட்ஸ் அகென்ஸ்ட் தி லேபர் லா" என்றாள் அவள்.

"ஹாஹா... இவ்வளவு யோசிச்சவன் அதை யோசிக்க மாட்டேனா?" என்றவன் சிரிப்பே அவளுக்கு கிலியை ஏற்படுத்த...

"பட் இட்ஸ் நாட் பேர் ராகவ்... ஏன் இப்படி பண்ற... " என்றாள் அவள் சோர்வாக.

"யூ நோ தி ஆன்சர் மை டியர் லிட்டில் கேர்ள்" என்றவன் சிரிப்புடன் சொல்ல...

அவளது சிரிப்பு மொத்தமும் தொலைந்து போனது.

"சரி சரி நேரமாச்சி... இன்னைக்கே இப்போவே வந்து டியூட்டில ஜாயின் பண்ணுக்கோ" என்றான் அவன்.

அவளுக்குத் தான் என்ன செய்வது என்றே தெரியவில்லை. அத்தனை கதவுகளும் அடைப்பட்ட உணர்வு.

"நம்ப ஆபிஸ் எங்க இருக்கு பாஸ்? நானும் உங்க கூடவே வரேன்" என்றாள் அவள் வேறு வழி இல்லாது.

"கண்டிப்பா... பாலோ மீ" என்றவன் முன்னே செல்ல...

அவளும் அவனைத் தான் பின் தொடர்ந்து சென்றாள்.

அவனது அறைக்கு நேர் எதிரில் இருந்த மற்றொரு அறைக்குள் புகுந்தவன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்த படி "வெல்கம் டூ அவர் கம்பெனி" என்றான் சிரித்த படி...

"ஏதே" என்றவள் அவனை அதிர்ந்து பார்க்க...

"புரியலையா? என்னுடைய அலுவலகத்திற்கு உன்னை அன்புடன் வரவேற்கிறேன்" என்றான் அவன்.

சுற்றி முற்றிப் பார்த்தவள் "இந்த லேப்டாப், அந்த ஒத்த டேபிள் இரண்டு சேர், ஏசி, ஒரு ப்ளவர் வாஸ், ஒரு பேப்பர் வெயிட், இரண்டு பேனா இது தான் உங்க ஊர்ல கம்பெனியா? இதுக்கு நீங்க எம்டி நான் பர்சனல் செகரட்டரியா?" என்றவள் அவனை அதிர்ச்சி நீங்காது கேட்க.

"யா மிஸ் ஸ்ரீ மதி எப்படி கொஞ்ச நேரத்துல எல்லாத்தையும் சரியா புரிஞ்சிக்கிட்டீங்களே" என்றான் அவன் சிரிக்காது.

"இந்த கம்பெனில என் அரும்பெரும் பணி என்னனு சொன்னீங்கனா நானும் செய்வேன்ங்க எம்டி சார்" என்றவள் சொல்ல...

"அதுக்கு தானே உன்னை அப்பாயின்ட் பண்ணியிருக்கேன்" என்றவன் ட்ராயரில் இருந்து சில காகிதங்களை எடுத்து அவள் முன் வைத்தவன் "ரைட் வன் டூ ஹன்ட்ரட், ஹன்ட்ரட் டைம்ஸ்" என்றவன் லேப்டாப்பில் கவனமாகி விட...

'ஏதே... இவன் பைத்தியமா நான் பைத்தியமானு தெரியலையே கடவுளே' என்று முனுமுனுத்துக் கொண்டவள் 'இந்த லேப்டாப்ல என்ன பண்றான்... ஒரு வேளை படம் எதுவும் பார்க்குறானோ?" என்று அந்த லேப்டாப்பை எட்டிப் பார்க்க...

"கொடுத்த வேலையை மட்டும் செய்ங்க மிஸ் ஸ்ரீ மதி... அப்புறம் வேலையை ஒழுங்கா செய்யலைனு உங்க மேல ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும்" என்றான் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு.

'சட்டித் தலையா இதெல்லாம் ஒரு வேலையாடா? இந்த வன் டூ த்ரீ எழுத தான் நான் மாஸ்டர்ஸ் வரை படிச்சிட்டு வந்துருக்கனா?" என்றவள் மனம் அவனை வசைப் பாடினாலும் அவளது கைகள் வேலையை செவ்வனே செய்து கொண்டு தான் இருந்தது.

"ஹலோ மேடம் என்னை திட்டி முடிச்சாச்சினா கொடுத்த வேலையை செய்ங்க" என்றவன் தனது போனை தூக்கிக் கொண்டு வெளியே செல்ல...

'அவன் அப்படி என்ன தான் பார்த்துட்டு இருக்கான்?' என்றவள் லேப்டாப் ஸ்க்ரீனை தன் பக்கமாக திருப்பி பார்க்க. அதில் பார்த்தீபன் ஏதோ ஒரு கம்பெனி நேர்முக தேர்விற்காக கம்பெனி வளாகத்தில் காத்திருக்கும் காட்சி தான் ஓடிக் கொண்டிருந்தது.

ராகவ் வரும் அரவம் கேட்டதும் லேப்டாப்பை இருந்த படி வைத்து விட்டு எழுதுவது போல குனிந்து அமர்ந்து கொண்டாள் அவள்.

அவளைப் பற்றி அறியாதவனா அவன். "போன்ல யாருனு கேட்க மாட்டியா ஸ்ரீ" என்றவன் கேட்க.

அவள் பதிலேதும் இல்லாது அவன் முகம் பார்க்க.

"*** கம்பெனி ஓனர்கிட்ட... டீஎல் போஸ்ட்க்கு ஆள் எடுக்குறாங்களாம் கம்பெனில... அது தான் என் ப்ரெண்ட் ஒருத்தனுக்கு வேலை வேணும் உங்க கம்பெனில கிடைக்குமானு கேட்டேன்" என்றவன் சொன்ன தோரணையே அதற்கு எதிர்மாறாக இருக்க...

அவனை ஒரு பெருமூச்சுடன் பார்த்தவள் அடுத்து அழைத்தது என்னவோ பார்த்தீபனுக்கு தான்.
 

Author: காதல் கவிதை
Article Title: கவிதை 6
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top