எபிசோட் 2

New member
Joined
Aug 21, 2025
Messages
8
d8f61a21a8765179cb84198127801d23.jpg

"வாம்மா மருமகளே, என்னம்மா இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆயிடுச்சு போல?"

"ஆமா அத்தை, இன்னைக்கு கொஞ்சம் வேலை அதிகம். அதான் லேட் ஆயிடுச்சு"

"சரி போ கை, கால், முகம் எல்லாம் கழுவிட்டு வா. உங்க அம்மா அடுப்படியில வேலை செஞ்சுட்டு இருக்காங்க. அப்படியே உங்க அம்மாக்கு கொஞ்சம் உதவியா இரும்மா. நான் இந்த ஒரு சீரியல் மட்டும் பார்த்துட்டு

வந்துடுறேன்"

"பரவாயில்ல அத்தை, நீங்க பாருங்க. நான் போய் அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணுறேன்"

என சொல்லி விட்டு உள்ளே சென்று மலர்விழி கை, கால், முகம் எல்லாம் கழுவி விட்டு கிச்சனுக்குள் சென்றாள்.

"அம்மா......."

மலர்விழியின் தாய் மீனாட்சி. வெகுளியானவள், யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பி விடுவாள். அதுதான் அவளுடைய பலவீனம். வீட்டில் எல்லா வேலைகளையும் செய்பவள். எல்லோரிடமும் அன்பாகவும், மரியாதையுடனும் நடந்து கொள்வாள். வீட்டில் எந்த சூழ்நிலையையும் சரி செய்து குடும்பத்தை அழகாக கொண்டு செல்பவள் மீனாட்சி. சாவித்திரி அவள் குடும்ப வாழ்க்கையில் பிடிக்காமல் இங்கு வந்தபோது கூட மீனாட்சி தான் அவளுக்கு ஆதரவாக நின்றாள். ஆனால் சாவித்திரி அவளை புரிந்து கொள்ளாமல் அவளை அவளுடைய வீட்டிலேயே வேலைக்காரி போல் வேலை செய்ய விட்டுவிட்டு அவள் சொகுசாக
வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள். இதை எல்லாம் தெரிந்து கொண்டும் மீனாட்சி, எதுவும் பேசாமல் குடும்பம் அமைதியாக இருக்க வேண்டும், எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவளும் அமைதியாக போகிறாள். மீனாட்சிக்கு அவளுடைய குடும்பம் தான் எல்லாமே. அவளுடைய உலகமே அவளுடைய மூத்த மகன் மதனும், அவளுடைய இளைய மகள் மலர்விழியும் தான். அவர்கள் மேல் உயிரையே வைத்திருக்கிறாள்.

"என்னடி வந்துட்டியா? அவரு எங்க?"

"யாரம்மா கேட்குற?"

"உங்க அப்பாவ தான் டி"

"அப்பா, வெளியே தான் இருக்காரு"

"என்ன எப்பவும் போல அப்பாவும், பொண்ணும் என் பையனை குறை சொல்லிட்டே வந்துருப்பீங்களே?"

"எப்படிம்மா உனக்கு தெரியும்?"

"உங்களுக்கு என் பையனை குறை சொல்லன்னா தூக்கமே வராதே"

"அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா, அப்படியெல்லாம் அப்பா ஒன்னும் பேசல"

"அதிசயமா இருக்கேடி!!!?"

"அம்மா, நான் உனக்கு ஹெல்ப் பண்ணட்டுமா?"

"அதெல்லாம் ஒன்னும் வேணாம், நீ போய் உட்காரு, போ. உங்க அத்தை, நல்லா சொகுசா உட்கார்ந்து, டிவி பார்த்துட்டு, நல்லா சாப்பிட்டு ஜாலியா இருக்கா. அவள ஹெல்ப் பண்றதுக்கு கூப்பிடவும் முடியல. அவளுக்காவது புரியணும், வந்து ஹெல்ப் பண்ணனும்னு. நீயே வேலைக்கு போயிட்டு அசதியா வந்திருப்ப. நீ ஏன்டி இந்த வேலையெல்லாம் செய்யணும்? நீ போ. நீ போயிட்டு, ரேவதிய வர சொல்லு"

ரேவதி சாவித்திரியின் மகள். கல்லூரி படித்துக் கொண்டிருக்கிறாள்.

"ரேவதி, ரேவதி....... எங்க இருக்க?"

"அக்கா நான் ரூம்ல இருக்கேன். அக்கா ரூம்க்கு வா"

"என்ன பண்ணிட்டு இருக்க?"

"அதுவாக்கா இந்த மேக்கப் ப்ராடக்ட் எல்லாம் வாங்கினேன். எப்படி இருக்கு அக்கா?"

"இது எதுக்குடி உனக்கு? நீ நேச்சுரலாவே அழகா இருக்க. இதெல்லாம் வேணுமா?"

"அக்கா என்ன சொல்ற? நான் காலேஜ்க்கு போறேன்னா, இந்த மாதிரி மேக்கப் போட்டு அழகா இருந்தா தானே நல்லா இருக்கும்?"

"சரிதான் போடி. நானெல்லாம் எங்க மேக்கப் போட்டேன்?"

"அக்கா நீ மேக்கப் போடலனாலும் அழகுக்கா. உன்ன மாதிரி நானும் அழகா இருக்க முடியுமா?"

"நீயும் அழகுதான்டி, அப்புறம் ரேவதி அம்மா உன்னை கிச்சனுக்கு ஹெல்ப் பண்ண கூப்பிட்டாங்க"

"என்ன அக்கா இப்படி சொல்ற? இங்க பாரு, நான் எவ்ளோ அழகா மேக்கப் போட்டு இருக்கேன். கிச்சன்ல போய் நின்னா என் மேக்கப் எல்லாம் போயிடும். அத்தை கிட்ட ஏதாவது சொல்லி சமாளிச்சிடுக்கா"

"சரிடி"

எனச் சொல்லிவிட்டு, வெளியில் வரும் வேளையில்

"மலரு, மலரு........"

என்று ஒரு குரல் கூப்பிட, அவள் வெளியில் வந்து பார்த்தாள்.

"சொல்லுங்க பாட்டி"

கமலாச்சி ராகவனின் அம்மா.

"எனக்கு ஒரு கிளாஸ் டீ போட்டு கொண்டு வாம்மா, ஆமா அந்த ரேவதி என்ன பண்றா?"

"பாட்டி அவள் படிச்சிட்டு இருக்காள்"

"பொய் சொல்லாத டி. அவ கண்டதையும் மூஞ்சில பூசிட்டு இருந்தா. நான் தான் பார்த்தேனே?"

"பாட்டி அவ சின்ன பொண்ணு, இந்த வயசுல அப்படிதான் பாட்டி இருப்பாங்க"

"நீ அவள இப்படி விட்டு கொடுக்காமலே இரு மலரு, எல்லா வேலையும் உன்கிட்ட ஒப்படைச்சிட்டு அம்மாவும், மகளும் எந்த வேலையும் செய்யாம நோகாம இருக்காங்க. உன்ன பத்தி கொஞ்சமாவது யோசிக்கிறாங்களா? நான் உதவி செய்யறன்னாலும் உங்க அம்மா அடுப்படி பக்கமே என்ன விட மாட்டேங்குறா. வயசானவங்க உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்னு சொல்றா. பாவம்டி, நீதான் எல்லா வேலையும் செஞ்சு கொடுக்கிற உங்க அம்மாவுக்கு"

"பாட்டி இதுல என்ன இருக்கு? நம்ம வீட்டுக்கு தானே செய்றேன்"

"உங்க அத்தையும் தான் இருக்காளே? கல்யாணம் ஆகி ஒரு நாலஞ்சு வருஷம் தான் குடும்பம் நடத்திருப்பாள். அதுக்கப்புறம் புருஷனை பிடிக்கல, குடும்பத்தை பிடிக்கலன்னு, இங்க வந்து உட்கார்ந்தவ தான், அதுக்கப்புறம் அங்க போகவே இல்ல. இங்கேயே இருந்துட்டா. அவளுக்கு கொஞ்சமாவது இதுவும் நம்ம குடும்பம் தான்னு தோணுதா? அவள் ஏதோ இந்த வீட்டுக்கு விருந்தாளியா வந்த மாதிரி எப்படி இருக்கா பாரு?"

"விடுங்க பாட்டி, அத்தை பாவம் சின்ன வயசுலயே எல்லா கஷ்டத்தையும் அனுபவிச்சுட்டாங்க. இப்பதான் சந்தோஷமா இருக்காங்க. அவங்கள ஏன் தப்பு சொல்றீங்க?"

"உனக்கு உங்க அத்தைய பத்தி தெரியலடி. அவள் எல்லாத்துக்கும் குறை சொல்லுவாள். நல்ல பணக்கார வீட்டுல வாழணும், சொகுசா இருக்கணுங்குறது தான்டி அவளோட ஆசையே. வேலை செய்யவே கூடாதுன்னா எந்த வீட்டுல? எந்த மாமியார் வச்சுக்கவாங்க சொல்லு?"

"பாட்டி இருங்க, நான் வந்து கேட்கிறேன். நீங்க டீ கேட்டீங்கல்ல? நான் போய் கொண்டு வரேன்"

என சொல்லிவிட்டு மலர் அங்கிருந்து கிளம்பினாள்.

"என்னடி மலரு வெளியே இருந்து வர? ரேவதியை கூப்பிட சொன்னனே?"

"அம்மா, ரேவதி படிச்சிட்டு இருக்காம்மா"

"அவள் படிச்சிட்டா இருக்கா? அவள் என்ன பண்ணிட்டு இருப்பான்னு எனக்கு தெரியும் டி. நீ எனக்கு எதுவும் செய்ய வேணாம். நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு டி. போ"

"அம்மா, பாட்டி டீ கேட்டாங்க"

"நான் கொண்டு போய் அத்தைக்கு கொடுத்துக்கறேன் போ"

எனச் சொல்லி அனுப்ப, மலர்விழி அவளுடைய ரூமுக்கு சென்று பெட்டில் உட்கார்ந்தாள். அப்போதுதான் அவளுடைய அண்ணன் உள்ளே வந்தான்.

"ஏய் மலர், வேலைக்கு போயிட்டு வந்துட்டியா?"

"அதெல்லாம் வந்துட்டனே, நீ என்ன பண்ணிட்டு இருக்க?"

"நானா வேலைக்கு அப்ளை பண்ணிருக்கேன்"

"அண்ணா, நான் என்ன அதுவா கேட்டேன்? நீ என்ன பண்ணிட்டு இருக்கன்னு சாதாரணமா கேட்டேன்"

"அது ஒன்னும் இல்ல மலர், எல்லாரும் இதே கேள்விய கேட்டு, கேட்டு எனக்கு அதுதான் கேட்குறாங்கன்னு எனக்கா தோண ஆரம்பிச்சிடுச்சு"

"அண்ணே அதெல்லாம் இல்லண்ணே, நான் தான் வேலைக்கு போறேன்ல? நீ பொறுமையா வேலை தேடு. உனக்கு பிடிச்ச வேலைய பாரு"

"அப்புறம் மலர், எனக்கு......."

"என்னண்ணே உனக்கு காசு தானே வேணும்? அங்க இருக்கு பாரு எடுத்துக்கோ"

"அது மட்டும் இல்ல மலரு, நான் வெளியே போகலாம்னு இருக்கேன்"

"என்ன அண்ணே சொல்ற? வேலை தேடுறத பாரு, இவ்ளோ நாள் வேலைக்கு போகாம இருந்த, பிடிச்ச வேலை கிடைக்கணும்னு சொன்ன, ஆனா இப்ப வேலைக்கு போறத நினைக்காம, வெளியே போய் ஊர் சுத்தணும்னு சொல்ற? எப்படி அண்ணே உன்னால இப்படி யோசிக்க முடியுது? வீட்ல அப்பா உன்ன எப்படி திட்டுகிறாரு? நான் ஒன்னு தான் உனக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்கேன். ஆனா என்னோட சம்பளம் எப்படி அண்ணே வீட்டுக்கு பத்தும்? ஏதோ இருக்கிறத வச்சு அம்மா குடும்பம் நடத்துறாங்க. புரிஞ்சுக்கோ அண்ணே"

மதன் வீட்டின் மூத்த மகன். நன்றாக படித்தவன். அதனாலேயே படித்த வேலைக்கு தான் போவேன் என்று வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் மலர்விழி வீட்டு சூழ்நிலையை புரிந்து கொண்டு, அவன் பிடித்த வேலைக்கு போக வேண்டும் என்பதற்காக அவளுக்கு பிடிக்காமல் ஏதோ ஒரு வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறாள்.

"என்ன மலர்?........இப்பதானே சொன்ன?"

"அண்ணே, அதுக்குன்னு இப்படியா இருக்கிறது? இரு, நான் இப்பவே அப்பா கிட்ட சொல்றேன். உனக்கு சப்போர்ட் பண்றதுனால தான் நீ இப்படி எல்லாம் பண்ற"

என சொல்லிவிட்டு, அவள் வேகமாக வெளியில் செல்ல, அவன் வேகமாக ஓடிச்சென்று அவள் வாயை பொத்திக் கொண்டான். அவள் அவன் கையை கடித்து விட்டு வேகமாக ஓடினாள். அவளை பின்தொடர்ந்து ஓடி வந்தான் மதன். மலர்விழி வேகமாக ஓடிச்சென்று அவள் அப்பாவின் பின்னால் ஒளிந்து கொண்டாள்.

"அப்பா இவன பாருங்கப்பா"

"ஏன்டா பொண்ண துரத்திட்டு வர?"

"என்னம்மா? என்னன்னு சொல்லு"

என கேட்க,

(அண்ணா சொல்லட்டுமா?)

என அவள் கண்களாலே கேட்க,

(ப்ளீஸ் வேண்டாம் மலர், இதான் லாஸ்ட் டைம் இந்த ஒரு தடவை மட்டும் போயிட்டு வந்துடறேன். இதுக்கு அப்புறம் நான் எங்கேயும் போகமாட்டேன். வேலை தேடுறேன், சீக்கிரமா வேலைக்கு போறேன். போதுமா?)

என அவன் கெஞ்சிக் கொண்டிருக்க,

"சரி, பார்க்க பாவமா இருக்கு அதனால விடுறேன். போயிட்டு எனக்கு ஏதாவது வாங்கிட்டு வரணும். புரியுதா?"

என அவள் கேட்க, அவர்கள் இருவரும் சமாதானமாக உள்ளே சென்றார்கள். இதுதான் மலர்விழியின் வாழ்க்கை. மலர்விழி அந்த குடும்பத்தில் முக்கியமானவள். துருதுருவென எல்லோரிடமும் சந்தோஷமாக பழகுபவள். அவள் இல்லை என்றால் அந்த குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அந்த நாளே போகாது. அப்பாவின் செல்ல மகள். அண்ணனின் குறும்பு தங்கை.

அன்று இரவு நன்றாக உறங்கினாள். காலை எழுந்தவுடன் வேகவேகமாக வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தாள்.

"மலரு காலையிலிருந்து சாயந்திரம் வரைக்கும் வேலை செய்யணும் டி. கொஞ்சமாவது சாப்பிட்டு போ"

"அம்மா டைம் ஆச்சும்மா"

"என்ன மீனாட்சி, அவள்கிட்ட போய் சாப்பிட சொன்னா? அவள் என்னைக்கு சாப்பிட்டு போயிருக்கா. சாப்பாடு போட்டு வந்து கொஞ்சம் ஊட்டி விடு"

"சரிங்க இருங்க"

என சொல்லி, மீனாட்சி உள்ளே சென்று ஒரு தட்டில் சாப்பாடு போட்டு, அதை கொண்டு வந்து அவளுக்கு ஊட்டி விட்டாள். அந்த நேரத்தில் மலர்விழி வேக வேகமாக பேக்குக்குள் டிப்பர் பாக்ஸை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

"அம்மா டைம் ஆச்சு, நான் கிளம்புறேன்"

என சொல்ல,

"இரு டி, தண்ணீர் கொஞ்சம் குடிச்சிட்டு போ"

என சொல்லி அவளை நிற்க வைத்தாள் மீனாட்சி. அவளும் வேகவேகமாக சாப்பாட்டை விழுங்கி விட்டு, தண்ணீர் குடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள். ராகவன் மலர்விழியை வண்டியில் கொண்டு சென்று பஸ் ஸ்டாப்பில் விட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினார்.

"ஐயோ லேட் ஆயிடுச்சு. பஸ் இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துருமே. நல்ல வேளை அப்பா கொண்டு வந்து விட்டாங்க. நடந்து வந்திருந்தா எவ்வளவு நேரம் ஆயிருக்கும்?"

என அவள் யோசித்துக் கொண்டே, ஒரு பக்கம் கைக்கடிகாரத்தை பார்க்க, இன்னொரு பக்கம் அவளுடைய கால் தரையில் நிற்காமல், அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருக்க, நகத்தை கடித்துக் கொண்டு படபடப்பாக இருந்தாள். பஸ் வருகிறதா? என்று பார்த்துக் கொண்டே இருக்கும் வேளையில், ஒரு பைக் அந்த வழியாக கடந்து சென்றது. அந்த பைக்கை பார்த்து, அந்த பரபரப்பிலும் மலர்விழி திமிராக ஒரு சிரிப்பு சிரித்தாள். பிறகு மீண்டும் பஸ் வருகிறதா? என்று பார்த்துக் கொண்டிருக்க, அப்போது அந்த பைக்.......


தொடரும்.........


படித்து விட்டு கமெண்ட் செய்யுங்கள்.
 
Last edited:

Author: Anu1997
Article Title: எபிசோட் 2
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top